பக்கம் எண் :

இருள்

வித்யா நகரம் என்ற பட்டணத்தில், எண்ணூறு வருஷத்துக்கு முன், திடசித்தன் என்று ஒரு ராஜா இருந்தான். அவனுடைய பந்துக்களிலே சிலர் விரோதத்தினால் அவனுக்குப் பல தீங்குகள் செய்யலாயினர். ஒரு நாள் அவன் நித்திரை செய்யும்போது எதிரிகள் அரண்மனை வேலைக்காரரிலே சிலரை வசமாக்கி உள்ளே நுழைந்து அவன் கால்களைக் கட்டி எடுத்துக்கொண்டு போய், சமீபத்திலிருந்த மலைச் சாரலில் ஒரு குகைக்குள்ளே போட்டு வெளியே வர முடியாதபடி ஒரு பாறையால் மூடி வைத்து விட்டார்கள். இவ்வளுவுக்கு மிடையே அவன் கண் விழிக்காதபடி மூக்கிலே ஒரு மயக்கப் பச்சிலையின் சாற்றைப் பிழிந்து விட்டார்கள்.

நெடு நேரம் கழிந்த பிறகு, பச்சிலையின் மயக்கம் தெளியவே அரசன் கண்ணை விழித்துப் பார்க்கும்போது, கை கால்கள் கட்டுண்டு தான் பேரிருளிலே கிடப்பதை உணர்ந்து கொண்டான். "எங்கிருக்கிறோம்" என்று சிந்தித்தான். இடம் தெரியவில்லை. "நமக்கு யார் இவ்விதமான தீமை செய்திருக்கக் கூடும்?" என்று யோசனை செய்து பார்த்தான். ஒன்றும் தெளிவாக விளங்கவில்லை. எழுந்து நிற்க முயற்சி செய்தான். சாத்தியப்படவில்லை. தாகம் நாக்கை வறட்டிற்று; கண்கள் சுழன்றன. நெஞ்சு படீல் படீலென்று புடைத்துக் கொண்டது. "தெய்வமே, என்னைக் கொல்லவா நிச்சயித்து விட்டாய்?" என்று கூவினான்.