பக்கம் எண் :

இருள்

"ஆம்" என்றொரு குரல் கேட்டது.

"ஆமென்கிறாயே, நீ யார்?" என்று வினாவினான்.

"நான் காலன். உன் உயிரைக் கொண்டுபோக வந்திருக்கிறேன்" என்று அந்த மறை குரல் சொல்லிற்று.

அப்போது திடசித்தன்:"நான் யௌவனப் பருவத்தில் இருக்கிறேன். அறிவிலும் அன்பிலும் சிறந்த எனது மனைவியையும், சிங்கக்குட்டி போன்ற என் மகனையும் செழிப்பும் புகழும் மிகுந்த என் நாட்டையும் விட்டு விட்டு உன்னுடன் வருவதில் எனக்குச் சம்மதமில்லை. இங்கிருந்து போய்விடு" என்றான். மறை குரல் கொல்லென்று சிரித்தது.

"நான் எப்போது கொண்டு போகப்பட்டேன்?" என்று திடசித்தன் கேட்டான்.

"விடியும் ஒரு ஜாமத்திற்குள்ளே" என்று குரல் சொல்லிற்று. இது கேட்ட மாத்திரத்திலே திடசித்தன் அயர்ந்து போனான். கண்கள் முன்னிலும் அதிகமாகச் சுழன்றன. நெஞ்சு முன்னிலும் விரைவாக அடித்தது. கால்கள் பதறலாயின.

அப்போது அவனுடைய தாய் சொல்லிக்கொண்டிருந்த மந்திர மொன்று நினைப்பு வந்தது. உடனே உச்சரித்தான். தாய் இறந்து போகும் சமயத்தில் அவனை அழைத்து அந்த மந்திரத்தை அவன் காதிலே உபதேசம் செய்துவிட்டு, "மகனே, உனக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்த சமயத்திலும் நீ இம்மந்திரத்தை உச்சரித்தால் விலகிப் போய்விடும்" என்று சொல்லியிருந்தாள். இப்போது அதனை உச்சரித்தான். 'கரோமி' (செய்கிறேன்) என்பதே அம்மந்திரம். "கரோமி, கரோமி, கரோமி" என்று மூன்று தரம் சொன்னான்.

காலிலே ஒரு பாம்பு வந்து கடித்தது.