இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி, "குதிரைக்கு ஏன் கொம்பில்லை?" என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சம்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுக சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்: "கேளீர், ரீவண மஹாராஜனே, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான்" என்றார். இதைக் கேட்டவுடன் ரீவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், "அதென்ன விஷயம்? அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும்" என்றான். வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்: "இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஓரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடனிருந்தார்கள். |