பக்கம் எண் :

குதிரைக் கொம்பு

ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள்தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்களை நடத்தி வந்தார்கள். ஆட்டுக் கணக்கு மாத்திரம்தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி யிருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களை யெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர். அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன், தனக்கு மூத்தவனாகிய பரதனுக்குப் பட்டங்கட்டாமல் தனக்கே பட்டங் கட்டிக்கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்குக் கோபமுண்டாய், ராமனையும் லக்ஷ்மணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்திவிட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிப்போய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகைக் கண்டு மோகித்து, அவளைத் திருட்டாகக் கவர்ந்துகொண்டு தண்டகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷ்மணர் முனிவர்களை யெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர்; யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்துவந்த சூர்ப்பநகைத்தேவியின் காதில் பட்டது. ராவணன் தங்கையாகையாலும், பிராமணகுலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்க மாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷ்மணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வரும்படி தனது படையினிடம் உத்திரவு கொடுத்தாள். அப்படியே ராமலக்ஷ்மணரைப் பிடித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பநகையின் சன்னிதியிலே கொண்டு சேர்த்தனர்.