பக்கம் எண் :

குதிரைக் கொம்பு

அவள் அவ்விருவரையும் கட்டவிழ்த்து விடும்படி செய்து பலவிதமான கடூர வார்த்தைகள் சொல்லி பயமுறுத்திய பிறகு ராஜபுத்திரராகவும், இளம்பிள்ளைகளாகவும் இருந்தபடியால், இதுவரை செய்த துஷ்ட காரியங்களை யெல்லாம் க்ஷமிப்பதாகவும், இனிமேல் இவ்விதமான காரியங்கள் செய்தால் கடுந்தண்டனை கிடைக்கு மென்றும் சொல்லி, நானாவிதமான புத்தி புகட்டிய பின்பு, அவர்களைச் சிறிது காலம் அரண்மனையிலிருந்து விருந்துண்டு போகும்படி செய்தாள். அப்போது சீதை சூர்ப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக்கொண்டு வந்தானென்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள். இதைக் கேட்டு சூர்ப்பநகை மனமிரங்கி, சீதையை இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து மிதிலையில் கொண்டு சேர்க்கும்படி ராவணனுக்குச் சொல்லியனுப்பினாள். ராவணனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தவுடனே அவளை மிதிலைக்கு அனுப்பும் பொருட்டு நல்ல நாள் பார்த்தார்கள். அந்த வருஷம் முழுவதும் நல்ல நாள் அகப்படவில்லை. மறு வருஷமும் நல்ல நாள் கிடைக்கவில்லை. ஆகையால் சீதையை இரண்டு வருஷம் தனது அரண்மனையிலேயே தங்கிவிட்டுப் போகும்படி ராவணன் ஆக்கினை செய்தான்.

தண்டகாரண்யத்தில் இராமன் சூர்ப்பநகையிடம் 'சீதை எங்கே?' என்று கேட்டான். மிதிலைக்கு அனுப்பிவிட்டதாகச் சூர்ப்பநகை சொன்னாள். 'எப்படி நீ இந்தக் காரியம் செய்யலாம்?' என்று கோபித்து லக்ஷ்மணன் சூர்ப்பநகையை நிந்திக்கலானான். அப்போது சூர்ப்பநகை தன் இடுப்பில் பழங்கள் அறுத்துத் தின்னுவதற்காகச் சொருகி வைத்துக் கொண்டிருந்த கத்தியைக் கொண்டு லக்ஷ்மணனுடைய இரண்டு காதுகளையும், கால் கட்டை விரல்களையும் நறுக்கி விட்டாள். இவளுடைய வீரச் செய்கையைக் கண்டு ராமன் இவள் மேல் மோகங் கொண்டு, 'அட! சீதையைத்தான் மிதிலைக்கனுப்பி விட்டாய், என்னை நீ விவாகஞ் செய்து கொள்ளு' என்றான். இதைக் கேட்டவுடனே சூர்ப்பநகை கன்னமிரண்டும் சிவந்து போகும்படி வெட்கப்பட்டு 'நீ அழகான பிள்ளைதான், உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். ஆனால், அண்ணா கோபித்துக் கொள்ளுவார். இனிமேல் நீ இங்கிருக்கலாகாது. இருந்தால் அபவாதத்துக்கு இடமுண்டாகும்' என்றாள்.

அப்போது ராமன்: 'சீதையை எப்போது மிதிலைக்கனுப்பினாய்? யாருடன் அனுப்பினாய்? அவள் இப்போது எவ்வளவு தூரம் போயிருப்பாள்?' என்று கேட்டான்.

அதற்குச் சூர்ப்பநகை:'இனிமேல் சீதையின் நினைப்பை விட்டுவிடு. அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன். அவன் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும். எது வேண்டுமானாலும் செய்யக்கூடும். மூன்றுலகத்திற்கும் அவன் அரசன். சீதையை மறந்துவிடு' என்றாள்.

இதைக் கேட்டு ராமன் அங்கிருந்து வெளியேறி எப்படியேனும் சீதையை ராவணனிடமிருந்து மீட்கவேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்தா நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்தக் கிஷ்கிந்தா நகரத்தில் அப்போது சுக்கிரீவன் என்ற ராஜா அரசு செலுத்தினான். இவனுக்கு முன் இவனுடைய தமயனாகிய வாலி ஆண்டான். வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சிநேகம்; இரண்டு பேரும் ஒரு பள்ளிக்கூடத்திலே கணக்கு வாசித்தார்கள். மூன்று உலகத்திலும் கப்பம் வாங்கின ராவணன் கிஷ்கிந்தா பட்டணத்துக்கு வாலி யாதொரு கப்பமும் செலுத்த வேண்டியதில்லையென்று சொல்லிவிட்டான்.