பக்கம் எண் :

குதிரைக் கொம்பு

இந்த வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்ரீவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு அவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்துகொண்டு அனுமான் என்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்யத்தை வசப்படுத்திக்கொண்டான். இதைக் கேட்டு ராவணன் மகா கோபத்துடன் சுக்கிரீவனுக்குப் பின்வருமாறு ஓலையெழுதியனுப்பினான்:

"கிஷ்கிந்தையின் சுக்ரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது: நமது சிநேகனைக் கொன்றாய்; உன் அண்ணனைக் கொன்றாய்; அரசைத் திருடினாய். இந்த ஓலை கண்டவுடன் தாரையை இலங்கையிலுள்ள கன்யா ஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்யத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்கவேண்டும். நீ ஸந்நியாஸம் பெற்றுக் கொண்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படாத விஷயத்தில் உன்மீது படையெடுத்து வருவோம்."

மேற்படி உத்திரவு கண்டவுடன் சுக்ரீவன் பயந்துபோய் அனுமானை நோக்கி 'என்ன செய்வோம்?' என்று கேட்டான். அனுமான் சொல்லிய யோஜனை என்னவென்றால்:

"வாலியிடம் பிடித்துக்கொண்ட தாரையையும் பதினேழு வயதுக்குட்பட்ட வேறு பதினேழரைக் கோடிப் பெண்களையும் ராவணனுக்கு அடிமையாக அனுப்பவேண்டும். ராவணனாலே ஆதரித்துப் போற்றப்படும் வைதிக ரிஷிகளின்யாகச் செலவுக்காக நாற்பது கோடி ஐம்பது லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இருநூற்று நாற்பது ஆடுமாடுகளும், தோற்பைகளில் ஒவ்வொரு பை நாலாயிரம் படி கொள்ளக் கூடிய நானூறு கோடிப் பைகள் நிறைய சோமரஸம் என்ற சாறும் அனுப்பி அவனைச் சமாதானம் செய்து கொள்ளவேண்டும். இளவரசுப்பட்டம் அங்கதனுக்குச் சூட்டுவதாகவும் வருஷந்தோறும் நாலாயிரம் கோடிப் பொன் கப்பம் கட்டுவதாகவும் தெரிவிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் பிழைப்போம்' என்று அனுமான் சொன்னான்.