சுக்ரீவன் அப்படியே அடிமைப் பெண்களும், ஆடுமாடுகளும், சாறும், முதல் வருஷத்துக் கப்பத் தொகையும் சேகரம் பண்ணி அத்துடன் ஓலை யெழுதித் தூதர் வசம் கொடுத்தனுப்பினான். தூதர்கள் ஆடுமாடுகளையும், சாற்றையும், ராவணன் அரண்மனையிலே சேர்ப்பித்தார்கள். அடிமைப் பெண்களையும் பணத்தையும் முனிவரிடம் கொடுத்தார்கள். ஓலையை ராவணனிடம் கொடுத்தனர். போகிற வழியில் தூதர் அடிக்கடி தோற்பையிலுள்ள சாற்றைக் குடித்துக் கொண்டு போனபடியால் தாறுமாறாக வேலை செய்தார்கள். ராவணன் தனது நண்பருடன் ஆடுமாடுகளையெல்லாம் அப்போதே கொன்று தின்று அந்தச் சாற்றையுங் குடித்து முடித்தவுடனே ஓலையைப் பிரித்து வாசித்துப் பார்த்தான். அடிமைப் பெண்களும் பணமும் ஏன் தன் வசம் வந்து சேரவில்லையென்று விசாரணை செய்தான். முனிவர்களின் மடங்களில் சேர்த்துவிட்டதாகவும், அவர்கள் அந்தப் பணத்தையெல்லாம் யாகத்திலே தக்ஷிணையாக்கியெடுத்துக் கொண்டபடியால், இனிமேல் திருப்பிக் கொடுப்பது சாஸ்திர விரோதமென்று சொல்லுவதாகவும், அடிமைப் பெண்கள் ஆசிரமங்களிலிருந்து பெரும்பாலும் ஓடிப்போய்விட்டதாகவும் செய்தி கிடைத்தது. தூதர்களையெல்லாம் உடனே கொல்லச் சொல்லிவிட்டு அந்த க்ஷணமே சுக்கிரீவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான். அப்படியே நல்லதென்று சொல்லி சேனாதிபதி போய்ப் படைகளைச் சேகரித்தான். இந்தச் செய்தியெல்லாம் வேவுகாரர் மூலமாகக் கிஷ்கிந்தைக்குப் போய் எட்டிவிட்டது. உடனே அனுமான் சொற்படி சுக்ரீவன் தனது படைகளைச் சேர்த்தான். ராவணன் படை தயாரான பிறகும், அதை நல்ல லக்னம் பார்த்து அனுப்ப வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தான். இதற்குள்ளே அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்குப் படைகளைத் திரட்டிக்கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். |