பக்கம் எண் :

குதிரைக் கொம்பு

இவனுடைய சேனையிலே ராம லக்ஷ்மணரும் போய்ச் சேர்ந்தார்கள். இந்தச் சேனையிலே நாற்பத்தொன்பது கோடியே தொண்ணூற்று நாலு லட்சத்து முப்பத்தேழாயிரத்து முந்நூற்றைம்பத்தாறு காலாளும், அதற்கிரட்டிக் குதிரைப் படையும், அதில் நான்கு மடங்கு தேரும், அதில் எழுபது மடங்கு யானைகளும் வந்தன.

இவர்கள் இலங்கைக்கு வருமுன்னாகவே ராவணனன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதிர்த்துக் கொன்று முடித்து விட்டன. ராம லக்ஷ்மணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக் கொண்டு ரகஸ்யமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள். இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது. உடனே ராவணன் 'ஹா! ஹா! ஹா! நமது நகரத்திற்குள் மனிதர் சேனை கொண்டு வருவதா! இதென்ன வேடிக்கை! ஹா! ஹா! ஹா!' என்று பேரிரைச்சல் போட்டான். அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான். சூரியமண்டலம் தரைமேலே விழுந்தது. பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள்.

மறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராஜனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்துவிட்டான். அப்பால் ராம லக்ஷ்மணர் அயோத்திக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள். இதுதான் நிஜமான 'ராமாயணக் கதை' என்று வக்ரமுக சாஸ்திரி ரீவண நாயக்கன் சபையிலே கதை சொன்னான்.

அப்போது ரீவணன்: "சாஸ்திரியாரே, குதிரைக்கு ஏன் கொம்பில்லை என்று கேட்டால் இன்னும் அதற்கு மறுமொழி வரவில்லையே?" என்று கேட்டான்.

வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறான்: