பக்கம் எண் :

அபயம்

அதற்குக் காசிராஜா: "ஏ வேதரிஷீ, தெய்வத்துக்குக் கண் உண்டு. அறியாமல் செய்த குற்றத்துக்குத் தண்டனை இல்லை. நான் வேதநூல் என்பதைப் பார்க்கவில்லை. அடித்தும் பயன்படாத உன்னை என்ன செய்வதென்று தெரியாமல் கோபாக்கிராந்தனாய் அஞ்ஞானத்திலே செய்தேன். என்னைத் தெய்வம் க்ஷமிக்கும். உனக்கும் க்ஷமை யுண்டாகுக" என்றான்.

அப்போது வாமதேவர்: "அடே ராஜா, நீ நம்முடைய சிஷ்யனாகத் தகும். கோபம் வருவது க்ஷத்திரிய குணம்; அதே க்ஷத்திரிய தர்மம்; அதைக் கைவிடாதே. இதற்கு மேல் மற்றொரு விஷயம் சொல்லுகிறேன், கேள். நமக்கு இந்த உலகம் கடுகு மாத்திரம். உலகம் சின்னக் கடுகு. அதற்கு வெளிப் புறத்திலே நாம் நின்று அதனை நாம் பார்வை யிடுகிறோம். நாம் நிற்பது பிரம்ம ஸாயுஜ்ய பதவியிலே. பிரம்ம ஸாயுஜ்ய பதவியிலே இருப்பவன் பிராம்மணன். இந்தக் கொள்கையை நீயும் கூடியவரை அனுசரித்தால் உனக்கும் நன்மையுண்டாகும். இந்தச் சமயம் உனக்கு நாம் அபயம் கொடுத்தோம். நமக்குப் பார்வதி-பரமேசுவரர் சாகாத வரம் கொடுத்திருக்கிறார்கள். அதிலே உனக்கும் பாகம் கொடுத்தோம். ஏனென்றால் அது வற்றாத அமிர்தம். இனிமேல் பிராம்மணர்களை அவசரப்பட்டு அடிக்காதே; சௌக்கியமாக அமிர்தமுண்டிரு" என்று சொல்லிவிட்டுப் போனதாக ஒரு பெரியவர் என்னிடம் ஒரு கதை சொன்னார்.