இதுகேட்டுக் காசிராஜன் சொல்லுகிறான்: "முனிவரே, நான் ஏற்கெனவே பூமண்டலாதிபதியாக வாழ்கிறேன். எனக்கு எதிலும் பயமில்லை" என்றான். வாமதேவர்: "நீ பூமி முழுவதையும் ஆளவில்லை. உன்னைவிடப் பெரிய மன்னர் பூமியில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் எவனாவது உன் மீது படையெடுத்து வந்தால் நீ நடுங்கிப் போவாய். மேலும் இந்த நிலையில் நீ உனது பத்தினிக்குப் பயப்படுகிறாய். மந்திரிகளுக்குப் பயப்படுகிறாய். வேலைக்காரருக்குப் பயப்படுகிறாய். குடிகளுக்கெல்லாம் பயப்படுகிறாய். விஷ ஜந்துகளுக்குப் பயப்படுகிறாய். மரணத்துக்குப் பயப்படுகிறாய். நீ பயமில்லை என்று சொல்வது எனக்கு நகைப்பை உண்டாக்குகிறது" என்றார். இதைக் கேட்டு காசிராஜன்: "இவ்விதமான பயங்கள் தீர்வதற்கு வழியுண்டோ?" என்று வினவினான். அதற்கு வாமதேவர் சொல்லுகிறார்: "அடே ராஜா, நீ மூடன்" என்றார். காசிராஜா அவரைக் கையினாலே ஒரு அடி அடித்தான். அப்போது வாமதேவர்: "அடே ராஜா, நீ எத்தனை அடி அடித்தபோதிலும் மூடன்தான்" என்று சொன்னார். காசிராஜன் தலை தெரியாமல் கோபப்பட்டு வாமதேவர் கையிலிருந்த வேத புஸ்தகத்தை வாங்கிக் கிழித்துப் போட்டான். அப்போது வாமதேவர்: "அடே ராஜா, வேதத்தைக் கிழித்தாய். இதற்குத் தெய்வத்தின் தண்டனை உண்டாகலாம்" என்று சொன்னார். |