பக்கம் எண் :

அபயம்

காட்டில் ஒரு ரிஷி பதினாறு வருஷம் கந்தமூலங்களை உண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் வாமதேவர். ஒரு நாள் அவருக்குப் பார்வதி பரமேசுவரர் பிரத்யக்ஷமாகி "உமக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்கள். "நான் எக்காலத்திலும் சாகாமல் இருக்க வேண்டும்" என்று வாமதேவரிஷி சொன்னார். அந்தப் படியே வரம் கொடுத்து விட்டுப் பார்வதி பரமேசுவரர் அந்தர்த் தானமாய் விட்டனர்.

அந்த வரத்தை வாங்கிக் கொண்டு வாமதேவ ரிஷி காசி நகரத்தில் கங்காநதி தீரத்தில் ஒரு குடிசை கட்டிக் கொண்டு அங்கே குடியிருந்தார். அவரிடத்தில் காசிராஜன் வந்து தனக்கு ஆத்ம ஞானத்தை உபதேசிக்க வேண்டும் என்று கேட்டான்.

அப்போது வாமதேவர் சொல்லுகிறார்: "ராஜனே, எப்போதும் பயப்படாமல் இரு; பயமில்லாத நிலைமையே தெய்வம். பயத்தை விட்டவன் தெய்வத்தைக் காண்பான்" என்றார்.