நானும், ராமராயரும் வேணு முதலியும், வாத்தியார் பிரமராய அய்யரும் இன்னும் சிலருமாகக் கடற்கரை மணல் மேலே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம். மின்னல் வெட்டு அதிகப்படுகிறது. ராத்திரி ஏழு அல்லது ஏழரை மணி இருக்கலாம். "நாமும் எழுந்து வீட்டுக்குப் போக வேண்டியதுதான்" என்று பிரமராய அய்யர் சொன்னார். வேணு முதலி பாடுகிறான்: "காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே தூற்றல் கதவு, சாளரமெல்லாம் தொளைத் தடிக்குது கூடத்திலே - மழை தொளைத் தடிக்குது கூடத்திலே." "பாட்டெல்லாம் சரிதான்; ஆனால் மழை பெய்யாது" என்று ராமராயர் மற்றொரு முறை வற்புறுத்திச் சொன்னார். "பந்தயம் என்ன போடுகிறீர்?" என்று பிரமராய அய்யர் கேட்டார். 'மழை பெய்தால் நான் உமக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறேன்; அதாவது, இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள் மழை பெய்யாது என்று நான் சொல்லுகிறேன்; பெய்தால் நான் உமக்குப் பத்து ரூபாய் கொடுப்பேன். பெய்யா விட்டால் நீர் நமக்குப் பத்து ரூபாய் கொடுப்பீரா?" என்று ராமராயர் சொன்னார். பிரமராயர் "சரி" யென்றார். அப்போது என் தோள் மேலே ஒரு தூற்றல் சொட்டென்று விழுந்தது. நான் "தூற்றல் போடுகிறது" என்று சொன்னேன். "இல்லை" யென்று ராமராயர் சொன்னார். |