"என் மேல் ஒரு தூற்றல் விழுந்தது" என்று சொன்னேன். அதற்கு ராமராயர் "அலையிலிருந்து ஒரு திவலை காற்றிலே வந்து பட்டிருக்கும். அது மழைத் தூற்றலன்று" என்றார். "சரி" என்று சும்மா இருந்து விட்டேன். "என்மேலே ஒரு தூற்றல் விழுந்தது" என்று பிரமராய அய்யர் கூவினார். "இதுவும் அலையிலிருந்துதான் வந்திருக்கும்" என்று ராமராயர் சொன்னார். "அதெப்படித் தெரியும்" என்று பிரமராய அய்யர் சொல்வதற்குள்ளாகவே தூற்றல் பத்துப் பன்னிரண்டு எல்லார் தலையிலும் விழுந்தது. "ராமராயருக்குப் பந்தயம் தோற்றுப் போய்விட்டது" என்று நான் சொன்னேன். "இல்லை. இது தூற்றல். நான் சிறு தூற்றல் கூடப் போடாதென்று சொல்லவில்லை. மழை பெய்யாதென்று சொன்னேன். சிறு தூற்றல் மழையாக மாட்டாது. இன்னும் இரண்டு மணி நேரம் இங்கே இருக்கலாம். அதுவரை மழை பெய்யாது என்று நிச்சயமாக இப்போதும் சொல்லுகிறேன்" என்று ராமராயர் சித்தாந்தம் செய்தார். வானம் அதிகமாகக் கறுத்துவிட்டது. இருள் கக்கிக் கொண்டு மேகத்திரள் யானைத்திரள் போலவே தலை மீது போகலாயிற்று. தூற்றல் போடவில்லை. நின்றுபோய் விட்டது. ஆனால் இருள் மேன் மேலும் அதிகப்படுகிறது. அப்போது நான் சொன்னேன்: "மழை பெய்தாலும் சரி; பொய்யாவிட்டாலும் சரி. நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும்" என்று சொல்லி எழுந்தேன். "தாங்கள் முதலாவது போங்கள். நானும் பிரமராய அய்யரும் இங்கே கொஞ்ச நேரம் இருந்து விட்டு வருகிறோம்" என்று ராமராயர் சொன்னார். |