பக்கம் எண் :

மழை

சரியென்று சொல்லி நானும் வேணு முதலியும் புறப்பட்டோம். மற்றவர்கள் அத்தனை பேரும் பந்தய விஷயத்திலேயே கவனமாக அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நாங்கள் புறப்பட்டு நூறடி தூரம் வருமுன்னகவே மழைத் தூற்றல் வலுக்கத் தொடங்கிற்று. கொஞ்சம் ஓடிக் கடற் பாலத்தருகே சுங்கச்சாவடியில் போய் ஒதுங்கினோம். மழை வர்ஷமாகச் சொரிந்தது. ராமராயரும், பிரமராய அய்யரும் மற்றோரும்குடல் தெரிக்க ஓடி வந்து சேர்ந்தார்கள். நானும் வேணு முதலியும் கொஞ்சம் நனைந்து போயிருந்தோம். மற்றவர்கள் ஊறுகாய் ஸ்திதியில் இருந்தார்கள்.

மழை முழங்குகிறது. மின்னல் சூறையடிக்கிறது. சுருள் மின்னல், வெட்டு மின்னல், வட்ட மின்னல், ஆற்று மின்னல்...

மின்னல் வீச்சிலே கண் கொள்ளை போகிறது. இடி என்றால் இடியா? நம்முடைய சிநேகிதர் பிரமராய அய்யருக்குத் தொண்டை இடிபோலே கர்ஜனை செய்வதை யொட்டி, அவர் மாலைதோறும் பேசுகிற திண்ணைக்கு இடிப் பள்ளிக்கூடம் என்று பெயர் சொல்வார்கள். அவரெல்லாம் இந்த நிஜ இடியைக் கண்டு கலங்கிப் போய் விட்டார். ராமராயருக்கு மனத்துக்குள்ளே பயம்; வெளிக்குப் பயத்தைக் காட்டினால் அவமானம் என்பது ராமராயருடைய கொள்கை. ஆதலால் அவர் வேஷ்டியைப் பிழிந்து தாடியைத் துவட்டிக் கொண்டு "ஓம் சக்தி" "ஓம் சக்தி" என்று சொல்லத் தலைப் பட்டார்.

வேணு முதலி பாடத் தொடங்கினான்:

திக்குக்கள் எட்டும் சிதறி - தக தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம் பக்க மலைகள் உடைந்து - வெள்ளம் பாயுது, பாயுது, பாயுது, தாம் தரிகிட தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம் சாயுது, சாயுது, சாயுது, பேய் கொண்டு