தக்கை யடிக்குது காற்று - தக்கத் தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிடம், தாம் தரிகிட வெட்டி யடிக்குது மின்னல் - கடல் வீரத் திரை கொண்டு விண்ணை யடிக்குது கொட்டி யிடிக்குது மேகம் - கூ கூ வென்று விண்ணைக் குடையுது காற்று, சட்டச் சட, சட்டச் சட, டட்டா - என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் எட்டுத் திசையும் இடிய - மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா! தக்கத் தக, தக்கத் தக, தித்தோம்! இவ்வாறு பாடிக்கொண்டு வேணு முதலி குதிக்கத் தொடங்கினான். காற்று ஹு ஹு ஹு என்று கத்துகிறது. வேணு முதலியும் கூடவே கத்துகிறான். இடி நகைக்கிறது. வேணு முதலி அதனுடன் கூட நகைக்கிறான். இவன் குதிக்கிற மாதிரியைக் கண்டு பக்கத்தில் இருந்தவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயம் தெளிந்தது. ராமராயர் "ஓம் சக்தி" மந்திரத்தாலே பயத்தை நிவிர்த்தி செய்துகொண்டு "மகா பிரகிருதி வீரரஸம் காட்டுகிறாள்" என்று சொன்னார். "ரௌத்ர ரஸம்" என்று பிரமராய அய்யர் திருத்திக் கொடுத்தார். "இரண்டும் ஒன்று தான்" என்று ராமராயர் மனதறிந்து பொய் சொன்னார். எதிரியை வார்த்தை சொல்ல விடக் கூடாதென்பது ராமராயருடைய கொள்கை. இப்படி யிருக்கையிலே மழை கொஞ்சம் கொஞ்சம் குறையலாயிற்று; நெடுநேரம் அங்கே நின்றோம். ராமராயருக்குச் சாயங்காலமே கொஞ்சம் ஜலதோஷம்; மழையில் உடம்பு விறைக்கத் தொடங்கிற்று. |