இதை வேணு முதலி கண்டு அவரை இரண்டு கையாலும் மூட்டைபோலே தூக்கி நிமிர்ந்து நின்று தலைக்கு மேலே கை யெட்டும் வரை கொண்டு போய்த் தொப்பென்று தரையின் மேலே போட்டான். "அட மூடா!" என்று சொல்லி ராமராயர் எழுந்து நின்று கொண்டு, உடம்பெல்லாம் சுடக்கெடுத்தது போல் நேராய் விட்டது. உடம்பில் உஷ்ணம் ஏறிவிட்டது. இப்போது குளிர் தெரியவில்லை" என்று சொன்னார். சிறிது நேரத்துக்குப் பின் மழை நின்றது. நாங்கள் வீட்டுக்குத் திரும்பினோம். வரும் வழியே வேணு முதலி பாடுகிறான்: "அண்டங் குலுங்குது தம்பி - தலை ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல் - மிண்டிக்குதித் திடுகின்றான் - திசை வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர் - செண்டு புடைத்திடு கின்றார் - என்ன தெய்விகக் காட்சியைக் கண் முன்பு கண்டோம் - கண்டோம், கண்டோம், கண்டோம் - இந்தக் காலத்தின் கூத்தினைக் கண் முன்பு கண்டோம்? தக்கத்தகத் தக்கத்தக தித்தோம். மறுநாள் காலையில் ராமராயர் பிரமராய அய்யருக்குப் பந்தய ரூபாய் பத்தும் செலுத்தி விட்டார். |