பக்கம் எண் :

பிங்கள வருஷம்

என் கையில் "குருபரம்பரா ப்ரபாவம்" என்ற வைஷ்ணவ நூலொன்று கொண்டு வந்திருந்தேன். சட்டைத் துணிகளையெல்லாம் கழற்றித் தலைக்குயரமாக வைத்துக்கொண்டு நானும் படுக்கை போட்டேன். அந்தப் புஸ்தகத்தில் "பிரவேசம்" என்ற முகவுரையில் பாதி வாசிக்கும்போதே எனக்கும் நல்ல தூக்கம் வந்தது. ஜில்ஜில்லென்று காற்று சுற்றிச் சுற்றி யடித்தது. கண் சொக்கிச் சொக்கித் தூங்கிற்று.

விழித்து விழித்துத் தூங்கிப் பின்பு கடைசியாக எழுந்தபோது பகல் பதினோரு மணியாய் விட்டது. எழுந்தவுடனே கோயிற் கிணற்றில் ஜல மிறைத்து ஸ்நானம் பண்ணினோம். அந்தக் கிணற்று ஜலம் மிகவும் ருசியுள்ளது. நன்றாகத் தெளிந்தது. ஸ்நானத்தினுடைய இன்பம் வர்ணிக்க முடியாது. பிறகு வேதபுரத்திலிருந்து ஒருவன் ஆகாரம் கொண்டு வந்தான். சாப்பிட்டுத் தாம்பூலம் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது கோயிலுக்கெதிரேயுள்ள அல்லிக் குளத்தில் நாலைந்து பேர் வந்து குளித்துக் கொண்டிருந்தார்கள். "நேர்த்தியான கிணற்று ஜல மிருக்கும் போது, அதை இறைத்துக் குளிக்காமல், அழுக்குக் குளத்திலே குளிக்கிற மூடர்களைப் பார்த்தீரா?" என்று நாராயணசாமி முணு முணுத்தான். அந்த நால்வருடைய பெயரெல்லாம் நான் விசாரிக்கவில்லை. அவர்கள் அப்போது பிங்கள வருஷத்துப் பலாபலன்களைப் பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய சம்பாஷணையை இங்கு எழுத வேண்டுமாதலால், அவர்களுக்கு, நெட்டையன், கட்டையன், சொரியன், கரியன் என்ற கற்பனைப் பெயர்கள் கொடுக்கிறேன்.

சொரியன் சொல்லுகிறான்: புது வருஷத்துப் பஞ்சாங்கம் கேட்டீர்களா? இந்த வருஷ மெப்படி? ஜனங்களுக்கு நல்லதா, கெட்டதா?

கரியன்: நள வருஷத்திலே நாய் படும் கஷ்டம்; பிங்கள வருஷத்தில் பின்னுங் கொஞ்சம் கஷ்டம். ஜனங்களுக்கு சுகமேது?