கட்டையன்: நேற்று பூமியிலே ஒரு நக்ஷத்திரம் வந்து மோதி, பூமி தூள் தூளாகச் சிதறிப் போகுமென்று ஒரு மாசகாலமாக எங்கே பார்த்தாலும் ஒரே பேச்சாய்க் கிடந்தது. ஒன்றும் நடக்கவில்லை. பொய் என்கிறேன். நெட்டையன்: அட போடா! தூள் தூளாகப் போகுமென்று நம்ம தமிழ்ச் சோசியன் சொல்லவில்லை. சீமைப் புளுகு! கட்டையன்: தமிழ்ச் சோசியனுக்கு இப்படிப் பெரிய பொய் சொல்லத் தெரியாது. அவன் புளுகுகிற விதம் வேறே! நெட்டையன்: அட போடா! தமிழனிலே ஒருத்தன் இரண்டு பேர் நிஜம் சொல்லுகிற சோசியனும் உண்டு. ஆனால் நிஜம் பேசுகிற சோசியனுக்கு ஊரிலே அதிக மதிப்புக் கிடையாது. கட்டையன்: சோசிய சாஸ்திரமே பொய்யென்கிறேன். அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் நாராயண சாமி ஒரு புறம் கிளம்பி விட்டான். அவன் சொல்லுகிறான்: "ஏன் காளிதாஸரே, அமெரிக்காவில் பெரிய பெரிய ஸயன்ஸ்கார சாஸ்திரிகள் கண்டுபிடித்துச் சொன்னது கூடப் பொய்யாகி விட்டதே! இது பெரிய ஆச்சர்யம்! பூமி தூளாகாவிட்டாலும் ஒரு பூகம்பமாவது நடக்கு மென்று நான் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். நேற்று ராத்திரி நம்ம தெருவில் அநேகர் தூங்கவே யில்லை. குழந்தை குட்டிகளை யெல்லாம் விழிக்க வைத்துக்கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஸயன்ஸ் பண்டிதர்கள் கூடச் சில சமயங்களில் பொய் சொல்லத்தான் செய்கிறார்கள்" என்றான். நான் குளத்தில் குளித்தவர்களுடைய சம்பாஷணையில் கவனம் செலுத்தினேன். |