நெட்டையன் சொல்லுகிறான்: வேதபுரத்திலே வெங்காயக் கடைக்குப் பக்கத்து வீட்டிலே பெரியண்ண வாத்தியார் இருக்கிறாரே, தெரியுமா? அவர் சோசியம் தப்பவே செய்யாது. அவர் எங்கள் தாத்தா செத்துப்போன நாள், மணி எல்லாம் துல்யமாகச் சொன்னார். பூமி வெடிக்காதென்றும், அது சீமைப் புளுகென்றும், அதை நம்பக் கூடாதென்றும் அவர் என்னிடம் பத்து நாளுக்கு முந்தியே சொன்னார். பெரியண்ண வாத்தியார் நாளது பிங்கள வருஷத்துக்குச் சொல்லிய பலன்களை யெல்லாம் அப்படியே சொல்லுகிறேன். கவனமாகக் கேளுங்கள். பிங்கள வருஷத்தில் நல்ல மழை பெய்யும், நாடு செழிக்கும், நாட்டுத் தானியம் வெளியே போகாது. ஏழைகளுக்குச் சோறு கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும். பசு முதலிய நல்ல ஜந்துக்கள் விருத்தியாகும். துஷ்ட ஜந்துக்கள் எல்லாம் செத்துப் போகும். தேள், பாம்பு, நட்டுவாய்க்காலி முதலிய வற்றின் பீடை குறையும், பிணி குறையும், துர்மரணமும் அகால மரணமும் குறையும். வெளித் தேசங்களில் சண்டை நடக்கும்; நம்முடைய தேசத்தில் சண்டை நடக்காமலே பல மாறுதல் ஏற்படும். ஜாதி பேதம் குறையும். ஆணுக்கும் பெண்ணுக்கும் படிப்பு விருத்தியாகும். ஜனங்களுக்குள்ளே தைரியமும், பலமும், வீரியமும், தெய்வபக்தியும் அதிகப்படும். நம்முடைய தேசம் மேன்மை யடையும் என்று பெரியண்ண வாத்தியார் சொன்னதாக நெட்டையன் சொன்னான். "நாராயணசாமி, கவனி" என்றேன். "பாமர ஜனங்களுடைய வார்த்தை" என்று நாராயணசாமி சொன்னான். "தெய்வ வாக்கு" என்று நான் சொன்னேன். பிறகு சிறிது நேரம் அந்தக் கோயிலில் சுகமாகப் பாட்டிலும் பேச்சிலும் பொழுது கழித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டோம். |