திடீரென்று எனக்குக் கீழே ஒரு வெடிகிளம்பும். அது என்னைக் கொண்டு நூறு காதவழி தூரத்தில் ஒரு க்ஷணத்திலே எறிந்துவிடும். அப்படிப்பட்ட வேகத்தை சாமானியமாக விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நம்மாலே ஸ்மரிக்கக்கூட முடியாது. "மனோவேகம் என்பதின் பொருளை நேற்று ராத்திரித் தான் கண்டேன். அடே ராமா! ஒரு தள்ளுத் தள்ளினால் நேரே தலையை வானத்திலே கொண்டு முட்டும். அங்கே போனவுடன் மற்றொரு வெடி, அது பாதாளத்திலே வீழ்த்தும். எட்டுத் திசையும் பதினாறு கோணமும், என்னைக் கொண்டு மோதினபடியாக இருந்தது. வெடியின் சத்தமோ சாமானியமன்று. அண்ட கோளங்கள் இடிந்து போகும்படியான சத்தம். இப்படி நெடுநேரம் கழிந்தது. எத்தனை மணி நேரம் இந்தக் கனவு நீடித்ததென்பதை என்னால் இப்போது துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால் சொப்பனத்திலே அது காலே யரைக்கால் யுகம் போலிருந்தது. மரணாவஸ்தை இனிமேல் எனக்கு வேறு வேண்டியதில்லை. மூச்சுத் திணறுகிறது, உயிர் தத்தளிக்கிறது, அந்த அவஸ்தை ஒரு முடிவுக்கு வருமென்றாவது, என் பிராணன் மிஞ்சு மென்றாவது எனக்கு அப்போது தோன்றவேயில்லை. "நெடுநேரம் இப்படி என்னைப் புரட்டித் தள்ளிய பிறகு ஒரு சுவர் மேலே கொண்டு மோதிற்று. அந்தச் சுவரில் 'ஓம் சக்தி' என்று ஒளி எழுத்துக்களால் பலவிடங்களில் எழுதப் பட்டிருந்தது. அவற்றுள் மிகவும் ஒளி பொருந்திய எழுத்தின் கீழே ஒரு சிறு பொந்திருந்தது. அந்தப் பொந்துக்குள்ளே போய் விழுந்தேன். ஆரம்பத்தில் இவ்வளவு சிறிய பொந்துக்குள் நாம் எப்படி நுழைய முடியுமென்று நினைத்தேன். பிறகு சொப்பனந்தானே? எவ்விதமாகவோ அந்தப் பொந்துக்குள் என் உடம்பு முழுதும் நுழைந்திருக்கக் கண்டேன். அதற்குள்ளே போனவுடன் புகைச்சலுமில்லை, வெடியும் நின்றுவிட்டது. மூச்சுத் திணறவுமில்லை, ஆறுதலுண்டாயிற்று. |