பக்கம் எண் :

பிழைத்தோம்

'பிழைத்தோமப்பா' என்று நினைத்துக் கொண்டேன். இவ்வளவுதான் கனவு. இந்தக் கனவின் பொருளென்ன? இது என்ன விஷயத்தைக் குறிப்பிடுகின்றது?" என்று கிருஷ்ணய்யங்கார் கேட்டார்.

"கனவுக்குப் பொருள் கண்டுபிடித்துச் சொல்லும் சாஸ்திரம் எனக்குத் தெரியாது" என்று சொன்னேன்.

கிருஷ்ணய்யங்காருக்குத் திருப்தி ஏற்படவில்லை. நான் கனவு சாஸ்திரத்திலேயே ஒரு வேளை நம்பிக்கை யில்லாமல் இருக்கலாமென்று நினைத்து அவர் கொஞ்சம் முகத்தைச் சிணுக்கினார். பிறகு சொல்லுகிறார்:

"அப்படி நினையாதேயுமையா, கனவுக்குப் பொருளுண்டு. பல முறை கனவிலே கண்டது நனவிலே நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்" என்றார்.

'காலைச் சுற்றின பாம்பு கடித்தாலொழியத் தீராது' என்று வசனம் சொல்லுகிறது. ஆதலால், நான் இவருக்கு ஏதேனும் விடை சொல்லித்தான் தீர வேண்டுமென்று கண்டு பிடித்துக் கொண்டேன். எனவே பின்வருமாறு சொன்னேன்:

"அந்த வெடிப்புத்தான் உலகநிலை; அந்த சக்தி மந்திரமே தாரகம். அந்தப் பொந்து விடுதலை. அதற்குள் நுழைவது கஷ்டம். தெய்வ வெடியினாலே தள்ளினாலொழிய மனிதன் ஜீவன் முக்தி நிலையில் நுழைய முடியாது. உள்ளே நுழைந்து விட்டால் பிறகு அது விஸ்தாரமான அரண்மனையாகக் காணப்படும். அதற்குள்ளே நுழைந்தவர்களுக்கு அதன்பிறகு எவ்விதமான அபாயமுமில்லை. அதற்குள்ளே போனவர்கள் உண்மையாகவே பிழைத்தார்கள்" என்று சொன்னேன். கிருஷ்ணய்யங்கார் இதைக் கேட்டு மிகவும் சந்தோஷத்துடன் விடை பெற்றுச் சென்றார்.