பக்கம் எண் :

புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன்

வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிறான். உடுக்கைத் தட்டுவதிலே முப்பத்தைந்து தாளபேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களும் காட்டுகிறான். தாள விஷயத்திலே மகா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணி மூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்பு துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு; மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தி யிருக்கிறது. ஆள் நெட்டை; தடியன். காலிலே ஹைதராபாது ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக் காலையிலே, இவன் நம்முடைய வீதி வழியாக வந்தான்;

உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வதுபோல செய்கிறான். நல்ல கெட்டிக்காரன். அவன் சொன்னான்:;

"குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது; ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது; சொல்லடி, சொல்லடி, சக்தி மகாகாளீ, வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு! தரித்திரம் போகுது. செல்வம் வருகுது; படிப்பு வளருது; பாவம் தொலையுது; படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான்; ஐயோவென்று போவான்.;