வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான். சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது; யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது; மந்திர மெல்லாம் வளருது, வளருது! குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு. சொல்லடீ, சொல்லடீ, மலையாள பகவதீ. அந்தரி, வீரி, சண்டிகை; சூலி! குடுகுடு குடுகுடு" இப்படி அவன் சொல்லிக்கொண்டு போவதை நான் மெத்தையிலிருந்து கேட்டேன். இதென்னடா புதுமையாக இருக்கிறதென்று ஆச்சரியத்துடன் அவனை நிற்கச் சொன்னேன். நின்றான். கீழே இறங்கிப் போய், அவனைச் சமீபத்திலே அழைத்து "எந்த ஊர்?" என்று கேட்டேன். "சாமி, குடுகுடுக்காரனுக்கு ஊரேது, நாடேது? எங்கேயோ பிறந்தேன், எங்கேயோ வளர்ந்தேன், எங்கெல்லாமோ சுற்றிக் கொண்டு வருகிறேன்" என்றான். அப்போது நான் சொன்னேன்: "உன்னைப் பார்த்தால் புதுமையாகத் தெரிகிறது. சாதாரணக் கோணங்கிகளைப் போலில்லை. உன்னுடைய பூர்வோத்திரங்களைக் கூடிய வரையில் ஸவிஸ்தாரமாகச் சொல்லு. உனக்கு நேர்த்தியான சரிகை வேஷ்டி கொடுக்கிறேன்" என்றேன். அப்போது, குடுகுடுக்காரன் சொல்லுகிறான்: "சாமி, நான் பிறந்த இடம் தெரியாது. என்னுடைய தாயார் முகம் தெரியாது. என்னுடைய தகப்பனாருக்கு இதுவே தொழில். அவர் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். "ஒன்பது கம்பளத்தார்" என்ற ஜாதி. எனக்குப் பத்துவயதாக இருக்கும் போது, தஞ்சாவூருக்கு என் தகப்பனார் என்னை அழைத்துக் கொண்டு போனார். அங்கே வைசூரி கண்டு செத்துப் போய் விட்டார். |