ஒரு ஜரிகை வேஷ்டி எடுத்துக் கொடுக்கப் போனேன்; போன தீபாவளிக்கு வாங்கினது; நல்ல வேஷ்டி.; "சாமி, வேண்டியதில்லை" என்று சொல்லி விட்டு அவன் மறுபடி உடுக்கை யடித்துக் கொண்டு போய்விட்டான். போகும்போதே சொல்லுகிறான். "குடுகுடு, குடுகுடு, குடுகுடு, குடுகுடு, சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது, தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது, எட்டு லச்சுமியும் ஏறி வளருது, பயந் தொலையுது, பாவந் தொலையுது, சாத்திரம் வளருது, சாதி குறையுது, நேத்திரம் திறக்குது, நியாயந் தெரியுது, பழைய பைத்தியம் படீலென்று தெளியுது. வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது, சொல்லடீ சக்தி, மலையாள பகவதி, தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது." என்று சொல்லிக் கொண்டே போனான். அவன் முதுகுப் புறத்தை நோக்கி, தெய்வத்தை நினைத்து, ஒரு கும்பிடு போட்டேன். |