பக்கம் எண் :

கடல்

ஒரு நாள் மாலையில் நான் வேதபுரம் கடற்கரையில் தனியிடத்தில் மணல் மேலே போய்ப் படுத்துக் கொண்டிருந்தேன். பகலில் நெடுந்தூரம் நடந்த இளைப்பினால் அப்படியே தூங்கிப் போய் விட்டேன். அந்தத் தூக்கத்திலே கண்ட கனவை எழுதுகிறேன்.

நடுக்கடலில் ஒரு தீவு; அதனிடையே பெரிய அரண்மனை. அரண்மனைக்கருகே சிங்காரத் தோட்டம். அதில் ஒரு நீரோடை. அதனருகே புல்லாந் தரை மேல் பதினாறு வயதுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருந்தாள். அவள் என்னைக் கண்ட மாத்திரத்தில் எழுந்து அரண்மனைக்குள் ஓடிப்போய் விட்டாள். நான் அவ்வழியைப் பின்தொடர்ந்து சென்றேன். போகிற வழியில் ஒரு பெரிய பாம்பு கிடந்தது. என்னைக் கண்டவுடன் படத்தைத் தூக்கி என் மேலே பாய்ந்து கடிக்க வந்தது. நான் ஓடினேன். அது என்னைத் துரத்திக் கொண்டு வந்தது. ஓடி யோடிக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தேன். பாம்பு காலுக்கு மிகவும் சமீபமாக வந்தது. கடலுக்குள்ளே குதித்தேன். கடலிலே புயற்காற்று, ஓரலையைத் தூக்கி மூன்று பனையளவு பள்ளத்தில் வீழ்த்துகிறது. எப்படியோ சாகாமல் அந்த அலைக்குத் தப்பிவிட்டேன். நெடுநேரத்துக் கப்பால் அலை அடங்கிற்று. நான் நீச்சை விடவில்லை, எப்படியோ நீந்திக் கொண்டு வருகிறேன். ஆனால் கரை தென்படவில்லை. பிறகு கைகளில் நோவுண்டாயிற்று. என்னால் நீந்த முடியவில்லை. என்னுடைய குல தெய்வத்தின் பெயரை உச்சரித்தேன். அங்கே ஒரு கிழவன் தோணி விட்டுக் கொண்டு வந்தான். "அண்ணே, அண்ணே, என்னை உன்னுடைய தோணியில் ஏற்றிக்கொள்ளு. நான் புயற் காற்றில் அடிபட்டு மிகவும் நொந்து போயிருக்கிறேன்" என்று சொன்னேன். அவன் தனது தோணியில் ஏற்றிக் கொண்டான். தோணியை விட்டுக் கொண்டு கடலிலே போகிறோம்;

போகிறோம்; வழி தொலையவேயில்லை. "அண்ணே, கரை சேர இன்னும் எத்தனை காலம் செல்லும்? எனக்குப் பசி கண் அடைக்கிறதே. நான் என்ன செய்வேன்?" என்று சொன்னேன். அந்தக் கிழவன் தின்பதற்குக் கொஞ்சம் அரிசி மாவும், ஒரு மிடறு தண்ணீரும் கொடுத்தான். இளைப்பாறி அப்படியே கண்ணயர்ந்தேன். (கனவுக்குள்ளே ஒரு தூக்கம்.)