பக்கம் எண் :

செய்கை

        படைகளுந் தீண்டா - அனல்
       சுடவு மொண்ணாது புனல் நனையாது!
       செய்தலுன் கடனே - அறம்
       செய்தலுன் கடனே - அதில்
       எய்தறும் விளைவினில் எண்ணம் வைக்காதே
       வில்லினை யெடடா"

என்று பகவான் சொன்னார்.

ஆதலால் பகவானுக்குத் தொழிலே பொறுப்பில்லை. ஆனால் தொழிலுண்டு. அது தெய்வத்தாலே கொடுக்கப்படும். உண்மையான தெய்வபக்தி யுடையவர்கள் செய்யும் செய்கையினால் கிருதயுகம் விளையும். அவர்கள் எவ்விதமான செய்கையும் தமக்கு வேண்டியதில்லை யென்று உதறி விட்டவுடனே பகவான் அவர்களைக் கருவியாகக் கொண்டு மகத்தான செய்கைகளைச் செய்வான்" என்று பிரமராய அய்யர் சொன்னார்.

அப்போது வீரப்ப முதலியார் என்னை நோக்கி "உமது கருத்தென்ன?" என்று கேட்டார். நான் "எனக்கெனச் செயல் யாதொன்று மில்லை" என்ற முன்னோர் பாடலை எடுத்துச் சொல்லி சக்தி நாமத்தைக் கூறி "நான் செய்கையற்று நிற்கின்றேன். பராசக்தி என் மூலமாக எது செய்வித்தாலும் அவளுடைய இஷ்டமே யன்றி என்னுடைய இஷ்டமில்லை" என்றேன்.

இந்தச் சமயத்தில் தண்டபாணிக்குப் பூஜை நடந்து தீபாராதனையாய்க் கொண்டிருப்பதாக ஒருவன் வந்து சொன்னான். எல்லாரும் எழுந்து சேவிக்கப் புறப்பட்டோம். சபை கலைந்தது.