வந்து விட்டதையா வேணு முதலிக்குப் பெரிய கோபம். பெரிய கூச்சல் தொடங்கி விட்டான். "சும்மா, சும்மா, சும்மா, சும்மா இருந்து சும்மா இருந்து தான் ஹிந்து தேசம் பாழாய்க் குட்டி சுவராய்ப் போய் விட்டதே? இன்னம் என்ன சும்மா? எவனைப் பார்த்தாலும் இந்த நாட்டில் சும்மாதான் இருக்கிறான். லக்ஷலக்ஷ லக்ஷமாகப் பரதேசி, பண்டாரம், ஸந்நியாசி, சாமியார் என்று கூட்டம் கூட்டாமாகச் சோம்பேறிப் பயல்கள். கஞ்சா அடிக்கிறதும், பிச்சை வாங்கித் தின்கிறதும், சும்மா உலாவுகிறதும்தான் அந்தப் பயல்களுக்கு வேலை. இரண்டு வேளை ஆகாரம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தொழில் செய்யும் வழக்கம் இந்த தேசத்திலே கிடையாது. ஜமீந்தார், மிட்டாதார், பண்ணையார், மிராசுதார், இனாம்தார், ஜாகீர்தார், மடாதிபதிகள், ராஜாக்கள் எல்லாருக்கும் சும்மா இருப்பதுதான் வேலை. சோம்பேறிப் பயல்களுடைய தேசம்" என்று பலவிதமாக வேணு முதலி ஜமாய்க்கிற சமயத்தில் குள்ளச்சாமி மேற்கு முகமாகச் சூரியனை நோக்கித் திரும்பிக் கொண்டு, "சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணம் என் றெம்மால் அறிதற்கெளிதோ பராபரமே" என்ற தாயுமானவர் கண்ணியைப் பாடினார். வேணு முதலி அவரை நோக்கி, "சாமியாரே, நீர் ஏதோ ராஜயோகி என்று காளிதாஸர் சொல்லக் கேள்விப்பட்டேன். உம்முடன் நான் பேசவில்லை. காளிதாஸரிடம் நான் சொல்லுகிறேன். நீர் சந்நியாசி யென்று சொல்லி ஜன்மத்தையே மரத்தின் ஜன்மம் போலே யாதொரு பயனுமில்லாமல் வீணாகச் செலவிடும் கூட்டத்தைச் சேர்ந்தவர். மரமாவது பிறருக்குப் பழங்கள் கொடுக்கும், இலைகொடுக்கும், விறகு கொடுக்கும். உங்களை மரத்துக்கொப்பாகச் சொல்லியது பிழை. உங்களாலே பிறருக்கு நஷ்டம்; மரத்தால் பிறருக்கு எத்தனையோ லாபம்" என்றான். இங்ஙனம் வேணு முதலி சொல்லிக்கொண்டிருக்கும் போதே குள்ளச் சாமியார்; |