"சும்மா இருக்கச் சுகம் சுகமென்று சுருதியெல்லாம் அம்மா நிரந்தரம் சொல்லவுங் கேட்டு அறிவின்றியே பெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால் வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதி வசமே!" என்று தாயுமானவருடைய பாட்டொன்றைச் சொன்னார். வேணு முதலிக்குக் கீழே விழுந்த நோவு பொறுக்க முடியவில்லை. அந்தக் கோபம் மனதில் பொங்குகிறது. அத்துடன் சாமியார் சிரித்துச் சிரித்துப் பாட்டு சொல்வதைக் கேட்டு அதிகக் கோபம் பொங்கிவிட்டது. வேணு முதலி சொல்லுகிறான்: "ஓய் சாமியாரே, நீர் பழய காலத்து மனுஷ்யன்; உம்முடன் நான் தர்க்கம் செய்ய விரும்பவில்லை. என்னுடைய சாமர்த்தியம் உமக்குத் தெரியாது. நான் பன்னிரண்டு பாஷைகளிலே தேர்ச்சியுடையவன். உமக்குத் தமிழ்மாத்திரம் தெரியும். நான் இந்த யுத்தம் முடிந்தவுடன் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போய் அங்கெல்லாம் இந்து மதத்தை ஸ்தாபனம் செய்யப் போகிறேன். நீர் தெருவிலே பிச்சைவாங்கித் தின்று திண்ணைதூங்குகிற பேர்வழி. உமக்கும் எனக்கும் பேச்சில்லை. தேசத்திற்காகப் பாடுபடுவதாக 'ஹம்பக்' பண்ணிக்கொண்டிருக்கிற காளிதாஸர் - இந்த விதமான சோம்பேறிச் சாமியார்களுடன் கூடிப் பொழுது கழிப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை விளைவிக்கிறது. உங்களிடமிருந்து தான் அவர் இந்த சும்மா இருக்கும் தொழில் கற்றுக் கொண்டார் போலும்!" என்று வேணு முதலி இலக்கணப் பிரயோகங்களுடன் பேசத் தொடங்கினான். மறுபடி சாமியார்: |