"சும்மா இருக்கச் சுகம் உதய மாகுமே இம்மாயா யோகம் இனி ஏனடா - தம்மறிவின் சுட்டாலே யாகுமோ சொல்ல வேண்டாம் கர்ம நிஷ்டா சிறு பிள்ளாய் நீ"
என்ற தாயுமானவருடைய வெண்பாவைப் பாடினார். அப்போது வேணு முதலி என்னை நோக்கி "ஏனையா! காளிதாஸரே, இந்தச் சாமியார் உமக்கு எத்தனை நாட்பழக்கம்?" என்று கேட்டான். நான் ஜவாப் சொல்லாமல் "சும்மா" இருந்து விட்டேன். அப்பொழுது குள்ளச்சாமியார் சொல்லத் தொடங்கினார். அத்துடன் இந்தக் கதையே வெகு நீளம். அது சுருக்கிச் சொன்னாலும் இரண்டு பாகங்களுக்குள்ளே தான் சொல்ல முடியும். நாலைந்து பாகம் ஆனாலும் ஆகக்கூடும். அவ்வளவு நீண்டகதையை இத்தனை காயிதப் பஞ்சமான காலத்தில் ஏன் சொல்லப் புறப்பட்டீர் என்றாலோ அது போகப் போக ஆச்சரியமான கதை. அற்புதமான கதை! இதைப்போலே கதை நான் இதுவரை எழுதினது கிடையாது. நான் வேறு புஸ்தகங்களிலே படித்ததும் கிடையாது. நீங்கள் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். எழுந்து கூ கூ கூ என்று கூவி ஆடிப்பாடிக் குதிக்கத் தொடங்குவீர்கள். நான் கேட்காத அற்புதத்தைக் கேட்டேன். காணத்தகாத அற்புதத்தைக் கண்டேன். ஆதலால் உலகத்திலே இதற்கு முன் எழுதப்பட்ட கதைகள் எல்லாவற்றிலும் அற்புதத்திலும் அற்புதமான கதையை உங்களுக்குச் சொல்லப் புறப்பட்டேன். ஆனால் இந்த வியாசம் நீண்டு போய்விட்டதே; அடுத்த பாகத்தில் தானே சொல்ல முடியும். நான் வாக்குத் தவற மாட்டேன். இரண்டாம்பாகம் சீக்கிரம் உங்களுக்குச் சொல்லுகிறேன். கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள். |