நீ ஹிந்து ஸ்தானத்து மகாயோகிகளின் மகிமை தெரியாமல் ஹிந்து மதத்தை யெப்படி நிலைநிறுத்தப் போகிறாய், - அதை நினைக்கும்போதே எனக்கு நகைப்புண்டாகிறது.. "அடா, வேணு முதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ளவரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணு முதலி, பார்! பார்! பார்!". இங்ஙனம் குள்ளச் சாமி சொன்னவுடன் நானும் வேணு முதலியும் அவரை உற்றுப் பார்த்தோம்.. குள்ளச் சாமி நெடிய சாமி ஆய்விட்டார்.. நாலே முக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச் சாமியார் ஏழேமுக்கால் அடி உயரம் வளர்ந்து விட்டார்.. ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப்போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன்போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் பார்வதியைப் போலவே இருந்தது. குனிந்தால் பிள்ளையார் போலிருந்தது. நிமிர்ந்து பார்க்கும் போது விஷ்ணுவின் முகத்தைப் போலே தோன்றியது. அப்போது குள்ளச்சாமி சொல்லுகிறார்:. அடா, வேணு முதலி, கேள். நான் ஹிந்துஸ்தானத்து யோகிகளுக்கெல்லாம் தலைவன். நான் ரிஷிகளுக்குள்ளே முதலாவது ரிஷி. நான் தேவர்களுக்கெல்லாம் அதிபதி. நானே பிரமா, நானே விஷ்ணு, நானே சிவன். நான் ஹிந்துஸ்தானத்தை அழியாமல் காப்பாற்றுவேன். நான் இந்த பூமண்டலத்தில் தர்மத்தை நிலைநிறுத்துவேன். |