நான் கிருதயுகத்தை ஸ்தாபனம் செய்வேன். நானே பரம புருஷன். இதற்குமுன் ஆசாரியர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்? எல்லா உயிரும் ஒன்று.. ஆதலால் காக்கை, புழு முதலிய ஜந்துக்களிடம் குரூரமில்லாமல் கருணை பாராட்டுங்கள் என்றனர்.. அடா, வேணு முதலி, கவனி.. சைவாச்சாரியர் வைஷ்ணவத்தை விலக்கினர். வைஷ்ணசாரியர் சைவத்தை விலக்கினர்.. நான் ஒன்று செய்வேன்.. காக்கையைக் கண்டால் இரக்கப்படாதே, கும்பிடு. கை கூப்பி நமஸ்காரம் பண்ணு! பூச்சியைக் கும்பிடு! மண்ணையும் காற்றையும் விழுந்து கும்பிடு! என்று நான் சொல்லுகிறேன்.. நான் வேதத்திலே முன் சொன்ன வாக்கை இப்போது அனுபவத்திலே செய்து காட்டப் போகிறேன். புராணங்களை யெல்லாம் விழுங்கி ஒன்றாக நாட்டப் போகிறேன். ஹிந்து தர்மத்தைக் கூட்டப் போகிறேன். அடா, வேணு முதலி கேள், மண்ணும் காற்றும், சூரியனும் சந்திரனும், உன்னையும் என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்றும் வேதம் சொல்லிற்று. இவைதான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வமில்லை. நம்முன்னே காண்பது நாராயணன். இதை நம்முள்ளே நாட்டி இதை வணங்கி இதன் தொழுகைக் கனியில் மூழ்கி, அங்கு மானிடன் தன்னை முழுது மறந்து விடுக.. அப்போது தன்னிடத்து நாராயணன் நிற்பான். இந்த வழியை நான் தழுவியபடியால் மனுஷ்யத் தன்மை நீங்கி அமரத் தன்மை பெற்றேன். ஆதலால் நான் தேவனாய்விட்டேன். இவைதான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வ மில்லை. தேவர்களுக்குள்ளே நான் அதிபதி. என் பெயர் விஷ்ணு; நானே சிவன் மகன் குமாரன். நானே கணபதி, நான் அல்லா, யேஹோவான். நானே பரிசுத்த ஆவி, நானே யேசு கிருஸ்து, நானே கந்தர்வன், நானே அசுரன், நான் புருஷோத்தமன், நானே ஸமஸ்த ஜீவராசிகளும்.. |