"நானே பஞ்ச பூதம்! அஹம் ஸத்! நான் கிருதயுகத்தை ஆக்ஞாபிக்கிறேன்! ஆதலால் கிருதயுகம் வருகிறது. எந்த ஜந்துவும், வேறு எந்த ஜந்துவையும் ஹிம்சை பண்ணாமலும் எல்லா ஜந்துக்களும் மற்றெல்லா ஜந்துக்களையும் தேவதா ரூபமாகக் கண்டு வணங்கும்படிக்கும் விதியுண்டானால் அது தான் கிருதயுகம் - அதை நான் செய்வேன். அடா வேணு முதலி! நான் உன் முன்னே நிற்கிறேன், என்னை அறி" என்று குள்ளச் சாமி சொன்னார். நான் அத்தனைக்குள்ளே மூர்ச்சை போட்டு விழுந்து விட்டேன்.. சுமார் அரைமணி நேரத்துக்குப் பின்பு எனக்கு மறுபடி பிரக்கினை ஏற்பட்டது. அப்போது பார்க்கிறேன். வேணு முதலி என் பக்கத்தில் மூர்ச்சை போட்டுக் கிடக்கிறான். பிறகு அவனுக்குச் சிகிச்சை செய்து நான் எழுப்பினேன்.. குள்ளச் சாமியார் எங்கே யென்று வேணு முதலி என் பத்தினியிடம் கேட்டான்.. அவள் சொன்னாள்: "குள்ளச்சாமி இப்படித்தான் கீழே இறங்கி வந்தார். கொஞ்சம் பாயசமும் ஒரூ வாழைப் பழமும் கொடுத்தேன். வாங்கித் தின்றார். குழந்தைகளுக்கும் எனக்கும் விபூதி பூசி வாழ்த்தி விட்டுப் போனார். 'நீங்கள் மெத்தையிலே என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு 'இரட்டை பாஷை யென்றால் அர்த்தமென்ன? என்பதைப் பற்றி அந்த வேணு முதலி மடையன், தர்க்கம் பண்ணுகிறான்' என்று சொல்லிச் சிரித்து விட்டுப் போனார்" என்று சொன்னாள். |