பக்கம் எண் :

காற்று II

"என்ன கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்த்தை கூடச் சொல்லமாட்டேனென்கிறாயே? வேறொரு சமயம் வருகிறேன். போகட்டுமா?" என்றேன்.

"அட போடா! வைதீகம்! வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்றுகொண்டிரு. இவளிடம் சில வியவகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். போய்விடாதே இரு" என்றது.

நின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நின்றதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது.

உடனே பாட்டு, நேர்த்தியான துக்கடாக்கள். ஒருவரிக்கு ஒரு வர்ண மெட்டு; இரண்டெ 'சங்கதி', பின்பு மற்றொரு பாட்டு.

கந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி, இது முடிந்தவுடன் அது; மாறி, மாறிப் பாடி - கோலாகலம்.

சற்று நேரம் ஒன்றை யொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே யிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும். அது தழுவிக் கொள்ளவரும். இது ஓடும் - கோலாகலம்!

இங்ஙனம் நெடும் பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது.

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்து விட்டு வரப்போனேன். நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.