வேதபுரத்தில் குள்ளச்சாமி என்றொரு பரதேசி யிருக்கிறார். அவருக்கு வயது ஐம்பதோ, அறுபதோ, எழுபதோ, எண்பதோ யாருக்கும் தெரியாது. அவருடைய உயரம் நாலரை அடியிருக்கும். கரு நிறம். குண்டு சட்டியைப் போல் முகம். உடம்பெல்லாம் வயிரக்கட்டை போலே நல்ல உறுதியான பெயர் வழி. அவருக்கு வியாதி யென்பதே கிடையாது. சென்ற பத்து வருஷங்களில் ஒரே தடவை அவர் மேலே கொஞ்சம் சொறிசிரங்கு வந்தது. பத்து நாளிருந்து நீங்கி விட்டது. அந்த மனுஷ்யன் ஜடபரதருடைய நிலைமையிலே யிருப்பதாகச் சொல்லலாம். பேசினால் பயித்தியக்காரன் பேசுவது போலிருக்கும். இழுத்திழுத்து, திக்கித் திக்கி, முன் பின் சம்பந்தமில்லாமல் விழுங்கி விழுங்கிப் பேசுவார். தெருவிலே படுத்துக் கிடப்பார். பசித்தபோது எங்கேனும் போய்ப்பிச்சை வாங்கிச் சாப்பிடுவார். கள் குடிப்பார். கஞ்சாத் தின்பார். மண்ணிலே புரளுவார். நாய்களுடன் சண்டை போடுவார். வீதியிலே பெண் பிள்ளைகளுக்கெல்லாம் அவரைக் கண்டால் இரக்க முண்டாகும். திடீரென்று ஒரு வீட்டுக்குள் நுழைந்து, அந்த வீட்டிலிருக்கும் சூழந்தைகள் நெற்றியிலே திருநீற்றைப்பூசி விட்டு ஓடிப்போவார். யாராவது திட்டினாலும், அடித்தாலும் பொறுத்துக் கொண்டு உடனே அவ்விடத்தை விட்டு ஓடிப்போய் விடுவார். |