பக்கம் எண் :

வண்ணான் தொழில்

குள்ளச்சாமி சொல்லுகிறார்:

"முதலாவது, நாக்கை வெளுக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. புறஞ் சொல்லக் கூடாது. முகஸ்துதி கூடாது. தற்புகழ்ச்சி கூடாது. வருந்தச் சொல்லலாகாது. பயந்து பேசக் கூடாது. இதுதான் வண்ணான் தொழில் ஆரம்பம். பிறகு அந்தக்காரணத்தை வெளுத்தல் சுலபம். சில இடங்களில் பொய் சொல்லி தீரும்படியாக இருந்தால் அப்போது மௌனத்தைக் கொள்ள வேண்டும். மௌனம் சர்வார்த்த சாதகம். அதை விட்டுப் பேசும்படி நேர்ந்தால் உண்மையே சொல்ல வேண்டும்; உண்மை விரதம் தவறக்கூடாது. தவற வேண்டிய அவசியமில்லை. உண்மை கூறினால் தீங்கு நேரிடுமென்று நினைப்போர் தெய்வம் உண்மை யென்பதை அறிய மாட்டார்கள். தெய்வம் உண்மை. அதன் இஷ்டப்படி உலகம் நடக்கிறது. ஆதலால் பயப்படுகிறவன் மூடசிகாமணி. அந்தக்கரணத்தை வெளுத்தலாவது அதிலுள்ள பயத்தை நீக்குதல். அந்தக்கரணத்தைச் சுத்தி செய்து விட்டால் விடுதலை யுண்டாகும்" என்றார்.

பின்னுமொரு சமயம் மேற்படி குள்ளச்சாமி என்னிடம் வந்து "தம்பி, நீ இலக்கணக்காரனாச்சுதே! 'வண்ணான்' என்று வார்த்தையை உடைத்துப் பொருள் சொல்லுவாயா?" என்று கேட்டார்.

நான் நகைத்து: "சாமி, உடைக்கிற இலக்கணம் எனக்குத் தெரியாது" என்றேன்.

அப்போது குள்ளச்சாமி சொல்லுகிறார்: "வண் - ஆன்: வண்ணான். ஆன் என்பது ரிஷபம். வள்ளலாகிய ரிஷபம் நந்திகேசுரர். அவருடைய தொழில் சுத்தஞான மூர்த்தியாகிய சிவனைச் சுமந்து கொண்டிருந்த்தல். தமிழ் நாட்டு ஞானாசாரியர்களுக்கு ஆதிமூர்த்தியும் வள்ளலுமாகி நிற்கும் இந்த நந்தி பகவானுடைய தொழிலாகிய ஆசாரியத் தொழிலையே நான் வண்ணான் தொழிலென்று சொல்லுகிறேன். எனக்கு வண்ணான் தொழில்" என்று மேற்படி குள்ளச்சாமி சொன்னார்.