பக்கம் எண் :

கலியுக கடோற்கசன் - கலியுக கடோற்கசன்

வேதபுரத்தில் கலியுக கடோற்கசன் என்பதாக ஒருவன் கிளம்பி யிருக்கிறான். பழைய துவாபர யுகத்துக் கடோற் கசனுடைய சரித்திரம் எல்லாருக்கும் தெரியும். அரக்கு மாளிகையிலிருந்து பாண்டவர் தப்பி ஓடும்போது இடும்பவனத்தில் தங்கினார்கள். அங்கிருந்த இடும்பாசுரன் என்ற ராக்ஷஸன் அவர்களைப் பிடித்துத் தின்ன வந்தான். அந்த இடும்பனை வீமன் கொன்று விட்டான். பிறகு அவன் தங்கையாகிய இடும்பி என்ற ராக்ஷஸி வீமன் மேல் காதல் கொண்டு தன்னை மணந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினாள். மற்ற சகோதரர் நால்வரும் பிரமசாரிகளாக இருக்கையில் தான் முதலாவது ஒரு ராக்ஷஸியைப் போய்க் கலியாணம் பண்ணிக் கொள்வதில் வீமனுக்குச் சம்மதமில்லை. இடும்பி குந்தியிடம் போய் முறையிட்டழுதாள். குந்தி வீமனை நோக்கி: "மகனே, ஒரு ஸ்திரீ வந்து காதல் கூறுமிடத்து அவளை மறுப்பது க்ஷத்திரிய தர்மமில்லை. ஆண் மக்கள் அங்ஙனம் செய்யலாகாது. ஆதலால், நீ இந்த ராக்ஷஸியைக் கல்யாணம் பண்ணிக் கொள்க" என்று கட்டளையிட்டாள். தாய் சொல்லுக்கிணங்கி வீமன் இடும்பியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான். இவ்விருவருக்கும் பிறந்த பிள்ளையே துவாபரயுக கடோற்கசன். இவன் வீமனுக்குச் சமமான பலமும் பராக்கிரமும் உடையவனென்று வேதவியாசர் தெரிவிக்கிறார். இது நிற்க. நமது கலியுக கடோற்கசனைக் கவனிப்போம். இவன் வேதபுரத்தில் ஒரு சாராயக் கடையிலே பணவசூல் குமஸ்தாவாக இருக்கும் ராமசாமி நாயக்கர் என்பவருடைய மகன். இவனுக்கு இப்போது வயது சுமார் இருபது இருக்கலாம். சாராயக் கடையில் பிராந்தி, விஸ்கி, ஜின் முதலிய ஐரோப்பியச் சாராயங்கள் விற்கிறார்கள். வேதபுரத்தில் குடி மும்முரம். ஆனபடியால் மேற்படி கடைக்குப் பற்று வரவு ஜாஸ்தி. அங்குப் பண வசூல்காரனாகிய ராமசாமி நாயக்கருக்கு மாதம் எட்டு ரூபாய் சம்பளம்.