தெலுங்கு பேசும் நாயக்கர். நல்ல க்ஷத்திரிய வம்சம். தெலுங்கு ராஜ்யம் போன பிறகு கெட்டுப் போய்த் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கும் நாயுடு கூட்டத்தைச் சேர்ந்தவர். மேற்படி ராமசாமி நாயக்கர் மகனுக்குத் தாய் தந்தையர் வைத்த பெயர் கோவிந்தராஜுலு. அவன் தானாக வைத்துக் கொண்ட பெயர் கலியுக கடோற்கசன். அவன் உயரம் ஐந்தேகால் அடியிருக்கலாம். குண்டுருளை போலே வயிரமான உடம்பு. இவன் மேலே மோட்டார்வண்டி ஓட்டலாம். மாட்டு வண்டி விடலாம். இவன் தலை ரோமத்தில் முந்நூறு ராத்தல் கல் தொங்க விடலாம். இவன் தலையிலே நாற்பது பேரடங்கிய பெரிய தொட்டிலை நிறுத்தி வைக்கலாம். இவன் இரண்டு விரல்களைக் கொண்டு மகா பாரதப் புஸ்தகத்தைக் கிழித்துப் போடுவான். இவன் பல்லினால் கல்லைப் பேர்த்துப் போடுவான். இவன் நகத்தால் கதவைப் பிளப்பான். வயது இருபதுக்கு மேல் ஆகவுமில்லை. நேற்றுக் காலையில் இந்தப் பையன் என்னைப் பார்க்கும் பொருட்டாக வந்திருந்தான். முதலாவது, தன்னுடைய தொழில்களை எல்லாம் என் வீட்டில் செய்து காட்டினான். நான் மிகவும் ஆச்சரியப் பட்டேன். பிறகு இவனுடைய புத்தி எந்த நிலைமையில் இருக்கிறதென்பதைப் பரிசோதனை செய்யும் பொருட்டாக அவனுடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்து பார்த்தேன். அவன் கையில் ஒரு குறிப்புப் புஸ்தகம் (பாக்கெட் நோட்புக்) வைத்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தால் சின்ன பைபிலோ அல்லது டைரி (தினசரி)யோ என்று ஐயப்படும்படியாக இருந்தது. "கையில் என்ன; டைரி புஸ்தகமா?" என்று கேட்டேன். அந்தப் பையன் ஹீ என்று பல்லைக் காட்டிக் கொண்டு, "இல்லெங்க; மந்திரவாதப் புஸ்தகங்கள்" என்றான். |