பக்கம் எண் :

கலியுக கடோற்கசன்

"நான் வாசிக்கலாமா?" என்று கேட்டேன். "வாசிக்கலாம்" என்று சொல்லி அந்தப் புஸ்தகத்தை என் கையில் கொடுத்தான். அது அச்சிட்ட புஸ்தகமன்று. அவன் கையால் எழுதியது. "பல ஊர்களில் சஞ்சாரம் பண்ணினேன். பல சாதுக்களிடம் கேட்ட மந்திரங்களை யெல்லாம் இதில் எழுதி வைத்திருக்கிறேன். நான் அவர்களுக்கு (அந்த சாதுக்களுக்குப்) பத்திரம் தயார் பண்ணிக் கொடுப்பேன்", என்று கலியுக கடோற்கசன் சொன்னான். "பத்திரமா? அதென்ன?" என்று கேட்டேன்.

அவன் சொல்லுகிறான்: "அதைப் பாமர ஜனங்கள் கஞ்சா இலை என்றும் சொல்லுவார்கள். சாதுக்களுக்கு மனதை ஒருநிலையில் நிறுத்திப் பிரமத்திலே கொண்டு சேர்க்க அது உபயோகங்க. மைசூரில் நான் போன மாசம் போயிருந்தேனுங்க. அங்கே பெரிய சாமியாருங்க, அவர் தான் எனக்கு ஆஞ்சநேயர் மந்திரம் கற்றுக் கொடுத்தாருங்க. அவர் ஒரு நாளைக்கு ஒன்றரை ரூபாய் கஞ்சா வாங்கிப் புகை குடிப்பாருங்க. அவர் மனதை உள்ளே கொண்டு நிறுத்தினால் பிறகு அதை வெளியே இழுப்பது கஷ்டங்க" என்றான்.

இவன் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் எனக்கு அந்தப் புஸ்தகத்தைப் பார்க்க வேண்டும் என்ற அவா அதிகப்பட்டது. புஸ்தகத்தைக் கையிலெடுத்துத் திறந்தபோது அதிலிருந்து பொல பொல வென்று இருபது முப்பது துண்டுக்காயிதங்கள் உதிர்ந்தன. எனக்கு ஆராய்ச்சியிலே பிரியம் அதிகமானபடியால் முதலாவது அந்தத் துண்டுக் காயிதங்களைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டுப் பிறகு புஸ்தகத்துக்குள்ளே நுழைவோம் என்று யோசித்து அந்தக் காயிதங்களைப் பார்த்தேன். அவற்றின் விவரம் பின்வருமாறு:

முதலாவது: "ஹோம்ரூல் ஸ்டாம்ப்" மூன்று இருந்தது.