அதில் ஒவ்வொரு ஸ்டாம்புக்கு நடுவிலும் அனிபெஸன்ட் அம்மாள் தலை போட்டிருக்கிறது. சுற்றி "தெய்வத்துக்காகவும் தேசத்துக்காகவும், ராஜாவுக்காகவும், சிறைப்பட்டவர்" என்றெழுதி யிருந்தது. அதைச் சூழ நான்கு புறத்திலும் இங்கிலீஷ், தெலுங்கு, உர்து, நாகரி, கன்னட லிபிகளில் "ஹோம் ரூல்" என்றெழுதி யிருந்தது. இரண்டாவது: ஒரு சின்ன டிக்கட். அதில் இங்கிலீஷ் பாஷையில் "மிஸ். தாரா; இந்தியன் லேடி ஸாண்டோ" என்று ஒரு புறத்திலும், வெளிச்சீட்டு (ஓளட் பாஸ்) என்று மற்றொரு புறத்திலும் போட்டிருந்தது. மூன்றாவது: ஒரு லேசான காயிதத்தைப் போன்ற செப்புத் தகடு. அதில் ஏதோ சக்கரம் செதுக்கும் பொருட்டு வைத்துக் கொண்டிருப்பதாகக் கடோற்கசன் சொன்னான். நாலாவது: ராமமூர்த்தி சர்க்கஸ் ஆட்ட ஜாப்தா. ஐந்தாவது: ஒரு கிறிஸ்தவப் பையனுடைய நேர்த்தியான புகைப் படம். அவன் யாரென்று கேட்டதற்குத் தன்னுடைய சிநேகிதனென்றும், இரும்பாலையில் வேலை பார்க்கிறானென்றும், தன்னைப் போலவே குஸ்தி வகையறாத் தொழில்களில் பழக்கமுடையவ னென்றும், அவனுக்குக் கலியுக கும்பகர்ணன் என்று பெயர் வைக்கலாமென்றும் கடோற்கசன் சொன்னான். ஆறாவது: மறுபடியும் ஒரு டிக்கட். அதில் இங்கிலீஷில் "எடிஸன் கினேமாடோக்ராப் கம்பெனி. ஒரு ஆளை உள்ளே விடு" என்றெழுதி யிருந்தது. ஏழாவது: ஸிகரட் பெட்டியிலிருந்தெடுத்த துர்க்கை படம். அதில் தேவி மகிஷாசுரனைக் கொல்லுகிறாள். பக்கத்தில் விநாயகருடைய தலை மாத்திரம் தெரிகிறது. உடம்பெல்லாம் மறைந்திருக்கிறது. சின்ன சுப்பிரமணியன் ஒன்றிருக்கிறது. அம்மனுக்குப் பதினாறு கைகள் போடுவதற்குப் பதிலாக எட்டுக் கை போட்டிருந்தது. |