பக்கம் எண் :

கலியுக கடோற்கசன்

எட்டாவது: இரண்டு சிங்கங்களுடன் ஒரு மனிதன் சண்டை போடுவது போல ஒரு படம். பத்திரிகையிலிருந்து கத்தரித்தது.

ஒன்பதாவது: யேசுகிறிஸ்து, மாட்டுக் கொட்டகையில் பிறந்து வைக்கோல் மேலே போட்டுக் கிடப்பதாகக் குழந்தையுருவங் காட்டிய படம்.

பத்தாவது: சாதாரண வருஷத்து மார்கழி மாதம் 18-ஆம் தேதி முதல் விரோதி கிருது வருஷத்துச் சித்திரை மாதம் 16-ஆம் தேதி வரையில் 'ஏகாதசி, 'ஷஷ்டி' பிரதோஷம், கரிநாள், யமகண்டம், ராகுகாலம், குளிகைகாலம், வாரசூலை இவற்றின் அட்டவணை.

பதினோராவது: இனி மேன்மேலும் அடுக்கிக் கொண்டு போனால் படிப்பவர்களுக்குப் பொறுமையில்லாது போய்விடும் என்ற அச்சத்தால் இங்கு மேற்படி கீழே யுதிர்ந்த துண்டுக் காயிதங்களைப் பற்றிய முழு விவரங்களும் தெரிவிக்காமல் விடுகிறேன். அதில் அநேகம் கடோற்கசனுடைய சிநேகிதர்களுடைய மேல் விலாசம், ஒரு சிறு துண்டுக் காயிதத்தில் குங்குமம் சுற்றியிருந்தது. அது கோயிலில் கொடுத்ததென்றும், அம்மன் பிரஸாத மென்றும் கடோத்கசன் விளக்கினான்.

இனி அவன் மந்திரவாதப் புஸ்தகத்துள் எழுதி யிருந்த விநோதங்களில் சிலவற்றை இங்குக் காட்டுகிறேன்.