அய்யும், கிலியும் ஸவ்வும், ஸவ்வும் கிளியும், ஐயும், நவகோடி சித்தர் சாயம் நசி, நசி: ஸர்வ மூலிகையும் இன்ன ராஜாவும் வசி, வசி. இந்த மந்திரங்களைத் தவிர, மேற்படி கலியுக கடோற்கசனுடைய நோட் புக்கில் இன்னும் இதுபோலவே முப்பது நாற்பது மந்திரங்களும், பலவிதமான சக்கரங்களும் இருந்தன. அந்த மந்திரங்களையும் சக்கரங்களையும் இப்போது புஸ்தகத்தில் முழுதும் விஸ்தாரமாகச் சொல்லப்போனால் நெடுந்தூரம் இந்த வியாசம் அளவுக்கு மிஞ்சி நீண்டுவிடும். எனினும் நமது ஹிந்து தர்மத்தையும், மந்திர மகிமையையும், இடைக்காலத்து மூட ராஜாக்களும், அயோக்யப் பூஜாரி, பண்டார, மந்திரவாதிகளும் எவ்வளவு கேலிக் கிடமாகச் செய்துவிட்டார் களென்பதை விளக்க, மேற்கூறிய திருஷ்டாந்தங்களே போதுமென்று நினைக்கிறேன். இன்னும் அவனுடைய குறிப்புப் புஸ்தகத்தில் போகப் போகப் பெருங் கேலியாக இருந்தது. எனக்கு அவற்றை யெல்லாம் பார்க்கும்போது சிரிப்பொரு பக்கம் வந்தது. தலை யொரு பக்கம் கிறுக்கிற்று. ஹிந்துக்களுடைய மூல பலமாகிய மந்திர சாஸ்திரத்தை இடைக்காலத்து மூடர் இவ்வளவு சீர்கெடுத்து வைத்திருப்பதையும், அதைத் தற்காலத்து மூடர்களிலே பலர் நம்புவதையும் நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்த முண்டாயிற்று. |