அதை நான் பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் குள்ளச் சாமி என்ற வேதபுரத்து ஞானி வந்தார். அவரிடம் அதைக் கொடுத்தேன். அவர் அந்தப் புஸ்தகத்தை வெளிமுற்றத்துக்குக் கொண்டு போனார். அங்கிருந்து நெடுநேரமாகத் திரும்பி வரவில்லை. என்ன செய்கிறார், பார்ப்போமென்று சொல்லி நான் எழுந்து வெளி முற்றத்துக்கு வந்தேன். என்னுடன் கலியுக கடோற்கசனும் வந்தான். அங்கு போய்ப் பார்த்தால், குள்ளச்சாமி அந்தப் புஸ்தகத்தில் மண் எண்ணெயை விட்டுத் தீயைக் கொளுத்தி எரிய விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். குழந்தைகள் பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்தனர். எனக்குச் சிரிப்பு வந்தது. கடோற்கசன் கோவென் றழுதான். குள்ளச்சாமி பெரிய ஞானியென்றும், பரமபுருஷனென்றும், அவர் செய்தது பற்றி வருத்தப்படக்கூடாதென்றும் சொல்லி நான் கடோற்கசனைத் தேறுதல் சொல்லி அனுப்பினேன். போகும் போது அவன் பைக்குள் குள்ளச்சாமியார் ஒரு பொற்காசு போட்டார். நான் ஒரு துண்டுக் காயிதத்தில் "ஓம் சக்தி" என்ற மந்திரத்தை எழுதி அவன் பைக்குள் போட்டேன். பொற் காசைக் கண்டவுடன் கடோற்கசன் கொஞ்சம் சந்தோஷமடைந்து புன்சிரிப்பு கொண்டான். அப்போது குள்ளச்சாமி சொல்லுகிறார்: "எல்லாம் தெய்வம்" - "தர்மமே மகா மந்திரம்" "உண்மைக்கு ஐயமுண்டு" "எல்லாரையும் வசப்படுத்த வேண்டுமானால், எல்லாரையும் தெய்வமாக நினைத்து மனத்தால் வணங்க வேண்டும்." இந்த விஷயங்களை யெல்லாம் இந்த தேசத்தில் பரவும்படி செய் என்றார். |