பக்கம் எண் :

கத்திச் சண்டை

மார்கழி மாசத்து நாலாம் வாரம். அதாவது, குளிர் ஜாஸ்தி. அதிலும், வேதபுரம் கடற்கரைப் பட்டினம். குளிர் மிகவும் ஜாஸ்தி. ஒரு நாள் ராத்திரி நான் குளிருக்குப் பயந்து சுகாதார சாஸ்திரத்தைக்கூடப் பொருட்டாக்காமல், என் அறைக்குள் நாலு ஜன்னல்களையும் சாத்தி முத்திரை வைத்து விட்டுப் படுத்துக் கொண்டிருந்தேன்.

விடிய இரண்டு ஜாமம் இருக்கும்போது விழித்துக்கொண்டேன். அதற்கும் குளிர்தான் காரணம். வாடை குளு குளுவென்று வீசுகிறது. வடபுறத்து ஜன்னலின் கதவுகள் காற்றில் தாமாகவே திறந்து கொண்டன. எழுந்து போய் ஜன்னலை நேராக்குவோமென்று யோசித்தால் அதற்கும் சோம்பராக இருந்தது. போர்வையை நீக்கிவிட்டு இந்தக் குளிரில் எவன் எழுந்துபோய் ஜன்னலைச் சாத்துவான்? என்ன செய்வோம் என்று சங்கடப்பட்டுக் கொண்டே படுத்திருந்தேன். மழை இதற்குள்ளே பெரிதாக வந்துவிட்டது. மழை களகளவென்று கொட்டுகிறது. வாடைக் காற்று வந்து பல்லைக் கட்டுகிறது.

உயிரை வெறுத்து தைரியத்துடன் எழுந்து போய் ஜன்னலைச் சாத்துவோம் என்று சொல்லி யெழுந்தேன்.

அப்போது ஒரு பண்டாரம் சங்கூதிச் சேகண்டி யடித்துப் பாடிக்கொண்டு வந்தான். மார்கழி மாசத்தில் வருஷந்தோறும் ஒரு வள்ளுவன் வந்து பாதி ராத்திரி நேரத்திலேயே வேதபுரத்து வீதிகளில் எல்லாம் திருவாசகம் பாடிக் கொண்டு சங்கூதிக் கொண்டு சேகண்டி யடித்துக் கொண்டு சுற்றுவது வழக்கம். அவன்தான் இந்த வருஷமும் வந்துகொண்டிருப்பானென்றெண்ணி நான் ஆரம்பத்தில் ஒரு நிமிஷம் கவனியாமல் இருந்தேன். பிறகு கணீர் என்ற பாட்டுச் சத்தம் காதில் வந்து மதுரமாக விழுந்தது. அடா இது பழைய வள்ளுவனுடைய குரலில்லை. இது ஏதோ புதிய குரலாக இருக்கிறதென் றெண்ணி நான் குளிரையும் கவனியாமல் ஜன்னல் ஓரத்திலே கொஞ்சம் நின்றேன். மழை கொட்டுகிறது. அறைக்குள்ளே எனக்குக் கைகால் விறையலெடுக்கிறது.