பக்கம் எண் :

கத்திச் சண்டை

அந்தப் பண்டாரம் வஸந்த காலத்தில், மாலை நேரத்தில், பூஞ்சோலையில் ராஜகுமாரன் ஒருவன் காற்று வாங்கிக் கொண்டு ஒய்யாரமாக நடப்பதுபோல (அந்தப் பண்டாரம்) அந்த மழையில் நடந்து செல்லுகிறான். பிரமானந்தமாகத் திருவாசகம் பாடுகிறான்:

"பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
       பேசுவதும் திருவாயால் மறை போலும் காணேடி."

இந்தப் பாட்டை அவன் பாடின ராகம் என் மனதை விட்டு இப்போதுகூட நீங்கவில்லை. மனுஷ்ய கானம் போலில்லை. தேவகானம் போலே யிருந்தது. "ஹே! யாரப்பா பண்டாரம் நில்லு!" என்று சொல்லிக் கூவினேன்.

அவன் நின்றான். "நீ போன வருஷம் திருப்பள்ளி யெழுச்சி பாடி வந்தவனாகத் தோன்றவில்லையே? நீ யார்?" என்று கேட்டேன். "நான் போன வருஷம் பாடினவனுடைய மகன். நான் பாடினது திருச்சாழல்" என்றான். இவன் அதிக பிரசங்கி என்று தெரிந்துகொண்டு, "உன் பெயரென்ன?" என்று கேட்டேன். "என் பெயர் நெட்டைமாடன்" என்று சொன்னான். "சரி போ" என்று சொன்னேன். அவன் இரண்டடி முன்னே போய் மறுபடி திரும்பி வந்து, "ஐயரே, உம்முடைய பெயர் என்ன?" என்று கேட்டான்.

"என் பெயர் காளிதாசன்" என்று சொன்னேன்.

"ஓஹோ! பத்திரிகைக்குக் கதைகள் எழுதுகிறாரே, அந்தக் காளிதாசன் நீர்தானோ?" என்றான்.

"ஓஹோ! இவன் பத்திரிகை படிக்கிறானா" என்றெண்ணி வியப்புற்று, நான் அவனிடம் "தம்பி. நெட்டைமாடா; உனக்குச் சங்கீதம் யார் கற்றுக் கொடுத்தார்கள்? நீ இதுவரை எந்த ஊரிலே வளர்ந்தாய்?" என்று கேட்டேன். அப்போது நெட்டை மாடன் சொல்லுகிறான்: