பக்கம் எண் :

கத்திச் சண்டை

"ஏ, ஐயரே, நான் மழையில் நிற்கிறேன். நீ அறைக்குள் நின்று கொண்டு என்னிடம் நீண்ட கதை பேசுகிறாயே. மேல் தளத்திலிருந்து கீழே இறங்கிவா; வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசலாம். நானும் உன்னிடத்தில் பல கேள்விகள் கேட்க வேண்டுமென்று நெடுநாளாக யோசனை பண்ணிக்கொண்டிருந்தேன், இறங்கி வருவீரா?" என்று கேட்டான்.

"இவன் என்னடா! வெகு விசேஷத்தனாகத் தெரிகிறதே!" என்று நான் ஆச்சரியப்பட்டுக் கீழே இறங்கி வருவதாக ஒப்புக் கொண்டேன். அவன் வாசல்படி யேறித் திண்ணையில் உட்கார்ந்தான். நான் கீழே போகையில் ஒரு மழை லாந்தர் கொளுத்திக் கொண்டு போனேன். அவன் கையிலும் ஒரு மழை லாந்தர் கொண்டு வந்திருந்தான். திண்ணையில் போய் உட்கார்ந்த உடனே நாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் ஏற இறங்கப் பார்த்துக் கொண்டோம். அவன் தலை சுத்த மொட்டை; உடம்பு ஒற்றைநாடி; சதைபற்றுக் கிடையாது. ஆனால் உறுதியான உடம்பு; மேலே துணி கிடையாது. இடுப்பில் மாத்திரம் ஒரு துணி கட்டிக் கொண்டிருந்தான். மேலெல்லாம் மழைத் தண்ணீர் ஓடுவதை அவன் துடைக்கவில்லை. குளிரினால் அவன் முகம் விகாரப்படவில்லை. அவனைப் பார்த்தவுடனே எதனாலேயோ ஹம்ஸ பக்ஷியின் ஞாபகம் வந்தது. ஹாம்! ஆமாம்! அவன் முன்பு நடந்து செல்லக் கண்டபோது நான் என் மனதில், "இவன் என்னடா. அன்ன நடை நடக்கிறான்!" என்று நினைத்துக் கொண்டேன். மேலும் இவன் ஆசாமியைப் பார்த்தால் கோயில் அன்ன வாகனம் எத்தனை பொறுமையும் இனிமையுமாகத் தோன்றுமோ அத்தனை பொறுமையும் இனிமையுமான முக வசீகர முடையவனாக இருந்தான்.

நான் அப்போது அவனை நோக்கி: "என்னிடம் ஏதோ கேள்விகள் கேட்க வேண்டுமென்று நெடுங்காலம் யோசனை செய்து கொண்டிருந்ததாகச் சொன்னாயே, கேள்" என்றேன்.