அப்போது நெட்டை மாடன் சொல்லுகிறான்: "உன்னிடம் கேள்விகள் கேட்க வேண்டுமென்ற விருப்பமிருந்ததாக நான் தெரிவிக்க வில்லை. உன்னிடம் சம்பாஷணை செய்ய வேண்டுமென்ற விருப்ப மிருந்ததாகச் சொன்னேன். நீ ஏதாவது கேள்வி கேள். நான் ஜவாப் சொல்லுகிறேன். அதுதான் எனக்குகந்த சம்பாஷணை" என்றான். "இதென்ன சங்கடம்" என்று யோசித்து, நான் இவனிடம் முன் கேட்ட கேள்விகளைத் திரும்பவும் கேட்டேன். "நீ சங்கீதம் எங்கே படித்தாய்? இத்தனை காலம் எந்த ஊரில் இருந்தாய்?" என்று வினாவினேன். நெட்டை மாடன் சொல்லுகிறான்: "அறிவூர் வீணை ரகுநாத பட்டர் மகன் அஞ்ஜனேய பட்டரிடம் நான் சங்கீதம் வாசித்தேன். இதுவரை அந்த ஊரிலே தான் வாசம் செய்தேன்" என்றான். அப்போது நான் கேட்டேன்: "தம்பி, நெட்டைமாடா, நீ ஜாதியில் வள்ளுவனாயிற்றே! ரகுநாத பட்டர், அஞ்ஜனேய பட்டர் என்ற பெயர்களைப் பார்த்தால் அவர்கள் பிராமணராகத் தோன்றுகிறதே உங்கள் ஜாதியார் பிராமணருக்குச் சமீபத்தில் வந்தால்கூட தீண்டல் தோஷம் என்று சொல்லுவது வழக்கமாயிற்றே. அப்படி யிருக்க நீ அவர்களிடம் சங்கீதம் எப்படிப் படித்தாய்?" என்றேன். அதற்கு நெட்டை மாடன் சொல்லுகிறான்: "நீ கேட்ட கேள்விக்கு ஜவாப் சொல்ல வேண்டுமானால் என்னுடைய கதையை ஆரம்பத்திலிருந்தே தொடங்கிச் சொல்ல வேண்டும். அவ்வளவு தூரம் பொறுமையுடன் கேட்பாயா?" என்றான். "கேட்கிறேன்" என்று சொல்லி உடம்பாடு தெரிவித்தேன். அப்போது நெட்டை மாடன் சொல்லுகிறான்: |