பக்கம் எண் :

கத்திச் சண்டை

"நான் வேதபுரத்தில் இருபத்தாறு வருஷங்களுக்கு முன் பிறந்தேன். என் தகப்பனார் சோற்றுக் கில்லாமல் நான் நாலு வயதுப் பையனாக இருக்கும்போது ஒரு சர்க்கஸ் கம்பெனியாருக்கு என்னை விற்று விட்டார். அந்தக் கம்பெனியில் சூராதி சூரத்தனமான வேலைகள் செய்து மிகுந்த கீர்த்தி சம்பாதித்தேன். பன்னிரண்டு வயதாக இருக்கும்போது அறிவூருக்குப் போனேன். அந்தக் கம்பெனித் தலைவரான மகாராஷ்டிரப் பிராமணருக்கு என்னிடம் மிகுந்த அபிமானம். அறிவூர் என்பது மலை நாட்டில் ஒரு பெரிய ஜமீந்தாருடைய ராஜதானி நகரம். அந்த ஊரில் சர்க்கஸ் இரண்டு மாசம் ஆடிற்று. அப்போது என்னுடைய எஜமானனாகிய ராயருக்கு வயதாய் விட்டபடியால் சீக்கிரத்தில் கம்பெனியைக் கலைத்து விட்டுப் பண்டரிபுரத்துக்குப் போய் அங்கு வீடு வாங்கித் தனது முதுமைப் பருவத்தை ஹரி பக்தியில் செலவிட வேண்டுமென்ற யோசனை பண்ணிக் கொண்டிருந்தார்.

அவருக்கும் ஜமீந்தாருக்கும் மிகுந்த நட்புண்டாயிற்று. ஜமீந்தார் கத்திச் சண்டையில் கெட்டிக் காரனாகவும் வயதில் குறைந்தவனாகவும் தனக்கொரு பக்கச் சேவகன் வேண்டுமென்று விரும்பினார். என்னுடைய எஜமானாகிய ராயர் என்னைச் சிபார்சு பண்ணினார். இதற்கிடையே எனது தகப்பனாருக்கும் எஜமான் ராயருக்கும் அடிக்கடி கடிதப் போக்குவரவு நடந்துகொண்டு வந்தது. எனது தகப்பனாரும் என்னை அடிக்கடி பல ஊர்களில் வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அறிவூர் ஜமீந்தார் எனக்கு அரண்மனையிலே சோறு போட்டு மகன் போலே வளர்த்தார். சங்கீதம் அந்த சமஸ்தானத்து பாகவதராகிய அஞ்சனேய பட்டரிடம் படித்தேன். யோகாப்பியாசம் பண்ணி யிருக்கிறேன். கத்திச் சண்டையிலே பேர் வாங்கி யிருக்கிறேன். ஆறு பாஷை பேசுவேன், பாடுவேன், நாட்டிய மாடுவேன், மிருதங்க மடிப்பேன். ஆனை யேற்றம், குதிரை யேற்றம், கழைக் கூத்து, மல் வித்தைகள் - எனக்குப் பல தொழிலும் தெரியும்" என்று சொன்னான்.