இதற்குள் பொழுது விடிந்து விட்டது. நல்ல சூரியோதயத்தில் அவன் முகத்தைப் பார்க்கும்போது நல்ல சுந்தர ரூபமுடையவனாக இருந்தான். அப்போது நான் அவனை நோக்கி: "நீ இன்று நம்முடைய வீட்டிலேயே காலை நேரம் போஜனம் செய்துகொள். உன்னுடைய கத்தி சுற்றும் திறமையை எனக்குக் கொஞ்சம் காண்பி" என்றேன். 'சரி'யென்று சம்மதப்பட்டான். பின்பு சொல்லுகிறான்: "எனக்குச் சரியாகக் கத்தி சுழற்றக் கூடியவர்கள் இந்த ஊரில் ஒரே மனுஷ்யன் தான் இருக்கிறார். நான் போய் என் வீட்டிலிருந்து கத்திகளை யெடுத்துக் கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு போய், மறுபடி ஐந்து...... மணியிருக்கும்போது வந்தான். இவன் பட்டாக் கத்தி, உண்மையான.........சண்டைக் கத்திகள் கொண்டு வருவானென்று நான் நினைத்திருந்தேன். இரண்டு மொண்ணைவாள் - வெண்ணெயை வெட்டும் சர்க்கஸ் கத்திகள் கொண்டு வந்தான். தனக்கு எதிர் நின்று சண்டை போடக் கூடிய வீராதி வீரனை என்னிடம் அழைத்து வருவதாக அவன் வாக்குக் கொடுத்தபடி அந்த மனிதனைத் தேடிப் பார்த்ததாகவும், அகப்படவில்லை என்றும் மற்றொரு நாள் கூட்டி வருவதாகவும் இன்று தான் மாத்திரம் தனியே கத்தி வீசிக் காண்பிப்பதாகவும் சொன்னான். 'சரி' யென்று சொல்லி நான் அவனுக்கு முதலாவது காபியும், இட்டலியும் கொண்டு வந்து வைத்துச் சாப்பிடச் சொன்னேன். பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது குள்ளச்சாமியார் என்ற யோகீசுரர் அங்கே வந்தார். அவரைக் கண்டவுடன் நெட்டைமாடன் எழுந்து ஸலாம் பண்ணி, 'ஜராம், ராம். மகாராஜ்!' என்றான். அவரும் இவனைக் கண்டவுடன். 'ராம், ராம்', என்றார். பிறகு நெடுநேரம் இருவரும் மலையாள பாஷையில் பேசிக் கொண்டார்கள். |