பக்கம் எண் :

மிளகாய்ப் பழச் சாமியார்

வேதபுரத்துக்கு வடக்கே முத்துப்பேட்டையில் பெரும்பாலும் தெலுங்க நெசவுத் தொழிலாளரும், தமிழ்க் கைக்கோளரும் வாசம் செய்கிறார்கள்.

அந்த ஊரில் நெசவுத் தொழிலே பிரதானம். "லுங்கிகள்" என்றும் "கைலிகள்" என்றும் சொல்லப்படும் மகமதியருக்கு அவசியமான கெட்டி சாயத்துணிகள் இங்கு மிகுதியாக நெய்யப்பட்டு, சிங்கப்பூர், பினாங்கு முதலிய வெளித் தீவாந்திரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நெசவுத் தொழிலாளர் அத்தனை பேரும் அங்காளியம்மனுடைய அவதாரமென்பதாக ஒரு ஸ்திரீயை வணங்குகிறார்கள். அந்த ஸ்திரீ சுமார் நாற்பத்தைந்து வயதுடையவள். சரீரத்தில் நல்ல பலமும், வீரதீர பராக்கிரமங்களும் உடையவள். இவளுடைய புருஷன் இறந்துபோய் இருபத்தைந்து வருஷங்களாயின.