பக்கம் எண் :

மிளகாய்ப் பழச் சாமியார்

இவள் காவி வஸ்திரமும் சடை முடியும் தரிக்கிறாள். இவளுடைய முகம் முதிர்ந்த, பெரிய, வலிய, உறுதியான ஆண் முகம் போல இருக்கிறது. அத்துடன் பெண்ணொளி கலந்திருக்கிறது. இவளுடைய கண்கள் பெரிய மான் விழிகளைப் போல இருக்கின்றன.

இவள் ஒரு சுப்பிரமனிய சுவாமி கோவில் கட்டிக்கொண்டிருக்கிறாள். கோயில் கட்டிடம் பெரும்பாலும் முடிந்து போய் விட்டது. இன்னும் சிகரம் மாத்திரந்தான் வைக்கவில்லை.

இவள் தன் வீட்டுக்குள் ஒரு வேல் வைத்துப் பூஜை பண்ணுகிறாள். அதன் பக்கத்தில் இரவும் பகலும் அவியாத வாடா விளக்கு எரிகிறது.

கோயிலும் இவள் வீட்டுக்குச் சமீபத்திலேதான் கட்டியாகிறது. இவளுடைய வீடு வேதபுரத்துக்கும் முத்துப் பேட்டைக்கும் இடையே ரஸ்தாவின் நடு மத்தியில் சுமை தாங்கிக்குச் சமீபத்தில் இருக்கிறது.

திருக்கார்த்திகை யன்று, பிரதி வருஷமும் அடியார்கள் சேர்ந்து இவளுக்கு மிளகாய்ப் பழத்தை அரைத்து உடம்பெல்லாம் தேய்த்து ஸ்நானம் செய்விக்கிறார்கள். அதனாலே தான் இவளுக்கு "மிளகாய்ப் பழச் சாமியார்" என்ற நாமம் ஏற்பட்டது.

நான் இந்த மிளகாய்ப் பழச் சாமியாருடைய கோயிலுக்குப் பல முறை போய் வேலைக் கும்பிட்டிருக்கிறென். இன்று காலை இந்த ஸ்திரீ என்னைப் பார்க்கும் பொருட்டு வந்தாள். வந்து கும்பிட்டாள்.

"எதன் பொருட்டுக் கும்பிடுகிறீர்?" என்று கேட்டேன்.

"எனக்குத் தங்களால் ஒரு உதவியாக வேண்டும்" என்றாள்.